புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அவசர காலங்களில் பயன்படக்கூடிய சிறிய மருத்துவமனையை முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கி இந்திய விமானப் படை (ஐஏஎப்) சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎப் தெரிவித்துள்ளதாவது: பீஷ்ம் திட்டத்தின் கீழ் சுமார் 720 கிலோ எடை கொண்ட சிறியமருத்துவமனை கடந்த செவ்வாய்க்கிழமை 1,500 அடி உயரத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாராசூட் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முதன்முதலாக தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதற்காக, இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த பாராசூட்களை ஆக்ராவில் உள்ள ஏர்டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஸ்மென்ட் வடிவமைத்துள்ளது.
பேரிடர் காலங்களில் வெளியில் வர இயலாமல் சிக்கிச் தவிக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக இந்த சிறிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.
200 பேருக்கு சிகிச்சை.. இதன் மூலம் ஆபத்தான நிலையில் இருக்கும் 200 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். ராணுவ பாரா ஃபீல்டு மருத்துவமனையின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது ஆகாயத்திலிருந்து கீழிறக்கப்பட்ட சிறியமருத்துவமனைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதை ஆரோக்கிய மைத்ரி பணிக்குழுவின் தலைவர், ஏர் மார்ஷல் ராஜேஷ்வைத்யா உறுதி செய்தார். இவ்வாறு ஐஏஎப் தெரிவித்துஉள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ பேரிடர் காலங்களில் எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் உயிருக்கு போராடுவோருக்கு அவசர மற்றும் விரைவான சிகிச்சையை அளிக்க ஏதுவாக மாதிரி சிறுமருத்துவமனை பாராசூட்மூலம் தரையிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில், மருத்துவ உதவியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பல புதுமையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுமற்றும் தரவு பகுப்பாய்வுகளை ஒருங்கிணைப்பது திறமையான மேலாண்மையை எளிதாக்கும்.
ஆபரேஷன் தியேட்டர், எக்ஸ்ரேஇயந்திரம், ரத்தப் பரிசோதனை சாதனம், வென்டிலேட்டர், கருவியுடன் துப்பாக்கிச் சூடு, எலும்புமுறிவு, கடுமையான ரத்தக் கசிவு,தீக்காயங்களுக்கு தேவையான சிகிச்சை பொருட்களை இந்த மருத்துவமனை உள்ளடக்கியிருக்கும்.
ரூ.150 கோடி.. ஒவ்வொரு யூனிட்டிலும், ஸ்ட்ரெச்சர், மாடுலர் மெடிக்கல் கியர், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உள்ளன. நிலைத்தன்மைக்காக சூரிய சக்திமற்றும் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.1.50 கோடி செலவாகும் என ஐஏஎப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.