சென்னை: பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளிகளில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவனின் மேல்படிப்புக்கான செலவை தமிழக அரசே ஏற்க வலியுறுத்தி, முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் எல்லப்பன் நகர் பகுதியை சேர்ந்த மாணவர் வா.மதன் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியான பொதுத்தேர்வு முடிவில் 500-க்கு 477 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கல்லூரி ஆசிரியராக இலக்கு எதிர்காலத்தில் தான் ஒரு கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கும் மாணவர் மதனின் குடும்ப சூழ்நிலை மிகுந்த ஏழ்மை நிலையிலே இருந்து வருகிறது.
எனவே, மாற்றுத் திறனாளி மாணவரான மதன் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவரது குடும்ப சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது மேல்படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.