30 வருடகால யுத்தத்தின் போது நாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்து ஓய்வுபெற்ற போர்வீரர்கள் குழுவொன்று சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களால் நிர்வகிக்கப்படும் மோசடிக்கு பலியாகியுள்ளது. இந்த வீரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, கூலிப்படை குழுக்களின் ஒரு பகுதியாக ரஷ்ய-உக்ரேனிய போருக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், இதன் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இலங்கை இராணுவத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த கௌரவப் படைவீரர்கள் தற்போது வெளிநாட்டில் கூலிப்படையினராக உள்ளமை மனவருத்தத்தை அளிக்கிறது.
அதிக சம்பளம், அந்த நாடுகளில் குடியுரிமை மற்றும் பிற சலுகைகள் போன்ற வாக்குறுதிகளால் இந்த வீரர்கள் ஈர்க்கப்பட்டு வெளிநாட்டு கூலிப்டையில் இணைந்துள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் ஊதியம் மற்றும் எந்த ஒரு சலுகைகளும் பெறவில்லை, மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கப்படவும் இல்லை. இந்த படைவீரர்களின் நிலைமை அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியன இந்த வீரர்கள் மற்றும் ரஷ்ய-உக்ரைன் மோதலில் அவர்கள் எதிர்கொண்ட உயிரிழப்புகள் பற்றிய தகவல்களைத் தேடி வருகின்றன. தமது உயிரைப் பணயம் வைக்கும் இவ்வாறான சட்டவிரோத திட்டங்களுக்கு பலியாக வேண்டாம் எனவும், எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் தமது குடும்ப நலன் கருதி நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவத் தளபதி போர் வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட சட்ட அமலாக்க முகவர் இந்த மனித கடத்தல் மோசடியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பிரஜைகள் குறிப்பாக போர் வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாகி உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு முகம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட அறிக்கைகளும் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய காணொலி பதிவேற்றப்பட்டுள்ளது, இந்த வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கானொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளன.