சென்னை: சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இணை பேராசிரியர்கள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் 13 மருத்துவர்கள் புதிய இடமாறுதல் கொள்கையின் அடிப்படையில் தங்களுக்கு இடமாறுதல் கோரி விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 13 பேரது விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு இடமாறுதல் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 13 பேரும் சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கின் விசாரணை நீதித்துறை உறுப்பினரான நீதிபதி எம். சுவாமிநாதன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளைப் பின்பற்றாமல், இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “புதிய பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளைப் பின்பற்றி, சட்டப்படி நியாயமான முறையில்தான் இந்த பணியிட மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று, வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த பணியிட மாறுதல் தொடர்பான உத்தரவு முன்னுரிமை மற்றும் குறைதீர் குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை பரிசீலிக்காமலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 13 இணைப் பேராசிரியர்களின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், புதிய பணியிட மாறுதல் கொள்கையைப் பின்பற்றி ஒரு மாதத்தில் இடமாற்ற உத்தரவுகளை மேற்கொள்ளலாம். ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது” என உத்தரவிட்டார்.