‘காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயில்…’ : “சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் லல்லா’வை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவார்கள். ராமர் கோயில் மீது புல்டோசரை ஏற்றுவார்கள். எங்கே புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாடம் படிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மரக்காணம் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்தனர். ஆனால், “நீங்கள் கொடியேற்று விழா நடத்தக் கூடாது” என்று அறநிலையத் துறையினர் தடை விதித்தனர். அப்போது பொதுமக்கள் சார்பில் நீதிமன்ற உத்தரவு நகலை அதிகாரிகளிடம் காட்டினர்.
அதற்கு, “நீங்கள் 22 நாள் விழாவை பல சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக நடத்தி வந்தீர்கள். ஆனால், திருவிழாவில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என விசிக சார்பில் இந்து அறநிலையத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோயிலானது, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசிக கோரிக்கைபடி பட்டியல் இன மக்களுக்கு ஒரு நாள் திருவிழா நடத்த அனுமதி கொடுத்தால், நீங்கள் வழக்கம் போல் திருவிழா நடத்த அனுமதிப்போம்” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கொடியேற்றம் நடக்காமல் தடைபட்டு நின்றது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மே 21 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையை பொறுத்தவரையில் தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது
“பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷா தீவிரவாத பேச்சு”: “தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷாவின் பேச்சு தீவிரவாத பேச்சாக இருக்கிறது. பசுவதை செய்தால், தலைகீழாக தொங்கவிடுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பேச்சுகளை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
“மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது” – அன்புமணி: தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
வாக்கு சதவீத தரவு குறித்து மனு: அவசர வழக்காக விசாரணை: மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
‘அரசியலாக்க வேண்டாம்’ – ஸ்வாதி மலிவால்: “எனக்கு நடந்தது மிகவும் மோசமான சம்பவம், அது தொடர்பாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆனால், எனக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என பாஜகவை கேட்டுக் கொள்கிறேன்” என்று டெல்லி முதல்வரின் உதவியாளர் தாக்கிய புகார் குறித்து ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.
‘அடுத்த தலைமுறைக்கு வழிவிட மறுக்கிறார் மோடி’: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்குப் பதிலாக, மீண்டும் தானே பிரதமர் ஆக வேண்டும் என ஆர்வம் காட்டுகிறார் என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத் துறையினர், “முறைகேடு மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாக கேஜ்ரிவாலுக்கும் ஹவாலா ஆபரேட்டர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேஜ்ரிவால் தனது லேப்டாப் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்த நிலையில், ஹவாலா ஆபரேட்டர்களிடம் இருந்து கேஜ்ரிவால் சாட் செய்ததற்கான ஆதாரங்கள் மீட்கப்பட்டன” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தென் மாநிலங்கள் குறித்து அமித் ஷா கருத்து: “இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். யாரேனும் தென் மாநிலங்களை தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
“சட்டம் – ஒழுங்கை கேலிக்கூத்து ஆக்கியதே 3 ஆண்டு சாதனை”: “சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி இருப்பதே திமுகவின் 3 ஆண்டுகால சாதனை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
“ஐபிஎல் தொடரை வைத்து இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது”: ஐபிஎல் ஆட்டங்களை வைத்து மட்டும் அணியைத் தேர்வு செய்ய முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் ஜெய் ஷா கூறும்போது, “தற்போது தேர்வாகியுள்ள அணியில் ஃபார்ம் மற்றும் அனுபவத்துக்கு இடையே சமநிலை உள்ளது. ஐபிஎல் ஆட்டத்திறன் ஸ்கோர்கள், விக்கெட்டுகளை மட்டும் வைத்து அணித் தேர்வாளர்களால் தேர்வு செய்ய முடியாது. வெளிநாட்டில் ஆடிய அனுபவமும் தேவை.” என்றார்.
காவல் துறை நடவடிக்கை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி: சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.