ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க
“காங்கிரஸ் தலைவர் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொருவரைத் தலைவர் பொறுப்பில் உட்காரவைத்தவர் ராகுல். இப்போது தலைவரை பொம்மையாக்கிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஏதேதோ பேசிவருகிறார். 2014-க்கு முன்பாக பெரு நிறுவனங்களிடமிருந்து எந்தக் கணக்கும் இல்லாமல் அரசியல் கட்சிகள் நிதி பெற்றுவந்தன. அதை முறைப்படுத்த 55 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், பெரு நிறுவனங்களிடமிருந்து காங்கிரஸ்தான் அதிக நிதி பெற்று வந்தது. இன்று பா.ஜ.க-வைக் குறைகூறும் ராகுல் காந்தி, 2014-க்கு முன்பாக காங்கிரஸ் பெற்ற நிதி விவரங்களை வெளியிடத் தயாரா… காங்கிரஸ் கட்சியின் ‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துகளையே தனதாக்கிக்கொண்டதாக வழக்கில் சிக்கியிருக்கும் ராகுல், பா.ஜ.க-வை நோக்கி அவதூறுகளைப் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது. பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத விரக்தியில் ராகுல் பேசுவதையெல்லாம் மக்கள் நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க-தான் பெரும்பான்மையுடன் வெற்றியடையப் போகிறது.”
இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் ராகுல். அம்பானியும் அதானியும் ஒருவருக்கு டெம்போவில் பணம் அனுப்புவார்கள் என்பது பிரதமர் மோடிக்கு எப்படித் தெரியும்… இதற்கு முன்பாக அவர்கள் டெம்போ, டெம்போவாக வாங்கியிருந்தால்தானே அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வாய்ப்பிருக்கிறது… ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துவிட்டோம்’ என்று பெருமையாகச் சொன்னாரே மோடி… இப்போது அவரே, ‘டெம்போ நிறைய கறுப்புப் பணம் வரும்’ என்கிறார். அப்படியென்றால் அம்பானி, அதானியிடம் கறுப்புப் பணம் ஏராளமாக இருக்கிறது என்று சொல்லவருகிறாரா மோடி… விமான நிலையங்கள், துறைமுகங்கள் தொடங்கி அரசு சொத்துகளை அதானிக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு. அதேபோல முன் அனுபவம் எதுவும் இல்லாத அம்பானியின் நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் ஆர்டரை வழங்கியிருந்தது மோடி அரசு. இப்படி எல்லா வகையிலும் அவர்களை வளர்த்துவிட்டு பிரதி உபகாரம் பெற்ற பா.ஜ.க., இப்போது தோல்வி பயத்தில் அவர்களைப் பற்றிய தகவல்களையே உளறிக்கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதைவைத்துத்தான் ராகுல் சில உண்மைகளைப் போட்டுத் தாக்குகிறார்.”