பாங்காக்,
சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027-ம் ஆண்டுக்கான 10-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது.
இந்த போட்டியை நடத்த பிரேசில் தனியாகவும், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்து இருந்தன. கூட்டாக நடத்த முயற்சித்த அமெரிக்கா, மெக்சிகோ நாடுகள் கடந்த மாதமும், தென்ஆப்பிரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த ரேசில் இருந்து விலகி விட்டன. இதனால் பிரேசில், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய கூட்டணி நாடுகள் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.
வாக்கெடுப்பில் பிரேசில் 119-78 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2027-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது. இதனால், 1991-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக தென் அமெரிக்க கண்டத்தில் அரங்கேற இருக்கிறது.