மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”மும்பையின் உரிமைகளை திரும்ப கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். 2019-ம் ஆண்டு மக்கள் தீர்ப்பு திருடப்பட்டது. வளர்ச்சிப்பணிகள் தடைபட்டது. இப்போது வளர்ச்சித்திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மும்பை மக்கள் வாக்களிக்க கிளம்பும் முன்பு இதற்கு முன்பு குண்டுகள் வெடித்ததையும், 2014-ம் ஆண்டுக்கு பிறகு குண்டு வெடிக்காததையும் நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும். இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வார்கள் என்ற உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது உங்களது மகள்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர்.
நாட்டின் நலனுக்கு உங்களின் ஒரு ஓட்டு தேவையாக இருக்கிறது. விக்சித் பாரத்திற்கு மும்பை முக்கிய பங்கு வகிக்கும். 2047-ம் ஆண்டு கனவுடன் வந்துள்ளேன். நான் ரத்து செய்த 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர உலகில் எந்த சக்தியாலும் முடியாது. ஆனால் ஓட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களால் அதற்கு சாத்தியம் இருக்கிறது. உத்தவ் தாக்கரேயிக்கு ஏற்பட்டது போன்ற மனமாற்றம் யாருக்கும் ஏற்பட்டதில்லை. முன்பு ஊடுருவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போது தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டம் என்னிடம் தயாராக இருக்கிறது. வறுமையை ஒழிக்க முடியாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது எனது அரசு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
உங்களது குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கு உங்களது ஓட்டை பயன்படுத்துங்கள். மகாராஷ்டிராவில் முந்தைய மகா விகாஷ் அகாடி அரசு மும்பையில் மெட்ரோ, புல்லட் ரயில் திட்டம், சரக்கு தட திட்டங்களை நிறுத்தினார்கள். மும்பையோடு தொடர்புடைய அனைத்து பெரிய திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அடல் சேது பாலம், மெட்ரோ ரயில் விரிவாக்கம், மும்பை ரயில் நவீனமயமாக்கல், புதிய விமான நிலையம், வந்தே பாரத் ரயில் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை நாட்டின் பொருளாதாரத்தின் சக்தியாக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை கடந்த 10 ஆண்டில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. லட்சக்கணக்கான சிறுமுதலீட்டாளர்கள் பயன் அடைந்துள்ளனர். அந்த நம்பிக்கையை எதிர்கட்சிகள் தகர்க்க நினைக்கிறது. மாவோயிஸ்ட் கொள்கை கொண்ட காங்கிரஸ் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டில் 1.25 லட்சம் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா வளர்ந்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டில் இளைஞர்களுக்கு எண்ணிலடங்கா வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதில் மும்பை இளைஞர்கள் அதிக அளவு பயன்பெறுவர்.
அடுத்த சில ஆண்டுகளில் உங்களிடம் வரும்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கும். உங்களுக்கு விக்சித் பாரத்தை கொடுத்துவிடுத்தான் செல்வேன். பாலாசாஹேப் தாக்கரே மற்றும் தியாகம் செய்த சிவசேனா தொண்டர்களுக்கு போலி சிவசேனா(உத்தவ்) துரோகம் செய்து இருக்கிறது. ராமர் கோயிலை துஷ்பிரயோகம் செய்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்துள்ளார். ஓட்டு வங்கிக்காக இந்தியா கூட்டணி மும்பை மக்களுக்கு துரோகம் செய்தனர். தீவிரவாதி கசாபிற்கு நற்சான்று கொடுத்தனர். பாகிஸ்தானியர் போன்று பேசினர்” என்றார். மும்பையில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88