சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு கோடை வாழிடம், ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில், கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி தற்போது கோடை விழா அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியானது வரும் 22-ம் தேதி தொடங்கி 26- ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் வருவதற்கு, இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. எனவே, இந்த நடைமுறை சிக்கல் இல்லாத ஏற்காடு சுற்றுலா தலத்துக்கு, ஏற்கெனவே, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தற்போது, ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை விழாவின்போது, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரிப் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் மலர்களால் ஆன சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடத்தப்படும்.
நாய்கள் கண்காட்சி, ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கான படகுப் போட்டி, ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி, ஏற்காடு வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி என கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் அலங்கார மலர்ச்செடிகள் உட்பட பல்வேறு வகையான செடிகள் 40 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பூங்காக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.