மும்பை: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார், ஆனால் அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மும்பையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மகா விகாஸ் அகாதி வலிமையாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாயுதி அரசு “சட்டவிரோத அரசு”. அவர்கள்(பாஜக) எங்களை தேசத் துரோகிகளாகவும் தங்களை தேசபக்தர்களாகவும் சித்தரிக்க முயல்கிறார்கள். வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடியே ஆதரிக்கிறார். நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களைத் தூண்டிவிடும் நோக்கிலேயே செயல்படுகிறார். எனது அரசியல் வாழ்க்கையில் இவரைப் போன்ற ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை.
பாஜக அரசால் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டு உடைக்கப்படுகின்றன. உண்மையான கட்சிகளின் கட்சி சின்னங்கள் பறிக்கப்பட்டு, பாஜக.,வை ஆதரிக்கும் கட்சிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. நரேந்திர மோடி ஜனநாயகத்தைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார். ஒருபோதும் ஜனநாயகத்தின்படி அவர் செயல்படுவதில்லை. நரேந்திர மோடியின் ‘கட்சி உடைப்பு’ கொள்கைக்கு மகாராஷ்டிரா மட்டுமே உதாரணம் அல்ல. மகாராஷ்டிராவுக்கு முன்பே, கர்நாடகா, மணிப்பூர், கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடியின் ‘கட்சி உடைப்பு’ கொள்கையின் தாக்குதல் இருந்தது. அவருடைய இந்தக் கொள்கைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். இண்டியா கூட்டணி அரசு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ தானியங்களை மக்களுக்கு வழங்கும். அரசியலமைப்பை காப்பாற்றவும் நல்லாட்சியை கொண்டு வரவும் இந்த தேர்தலில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி மிரட்டும் நரேந்திர மோடியின் செயல் தொடராது” என தெரிவித்தார்.