காஞ்சிபுரம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கோடை விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் வாகனங்களின் இருக்கைகள், அவசர உதவி கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள், வேன்கள் உள்ளிடவற்றை தனியார் பள்ளிகள் பயன்படுத்துகின்றன. சில நேரங்களில் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ – மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடைபெறும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 45 தனியார் பள்ளிகளின் 307 பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டன. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் வாகனங்களில், இருக்கைகள், அவசர உதவிகள், முதலுதவி பெட்டிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ப்பட்டது.