கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும். இதில் 40 அடி வரை சேறும், சகதியுமாக தேங்கியுள்ளது. இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1, பில்லூர் 2 ஆகிய கூட்டுக்குடிநீர் திட்டங்களும், பவானி ஆற்றை மையப்படுத்தி பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த பருவமழைக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாதது, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாதது, அதிகரித்த வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சரளமாக சரிந்தது. கிட்டத்தட்ட அணையின் நீர்மட்டம் 54 அடி வரை சென்றது.
இதனால் அணையையும் அதையொட்டி பவானி ஆற்றையும் மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களில் இருந்து தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
இதை சமாளிக்க நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி அணையிலிருந்து பின்பக்கமாக தண்ணீர் திறக்கப்பட்டு, கேரளா வழியாக நீர்வழித்தடம் மூலம் நீர் பில்லூர் அணைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சூழலில் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்தில் மிதமாக இருந்த மழை அளவு நேற்றைய நிலவரப்படி கனமழையாக மாறியது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழையால், பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பில்லூர் அணை பகுதியில் நேற்று 17 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் இன்றைய நிலவரப்படி பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்தது.
அதேபோல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் பவானி ஆற்றிலும் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நீரின்றி வறண்டும், சில இடங்களில் குறைந்த அளவு நீரும் காணப்பட்ட பவானி ஆற்றில் இன்று நீரோட்டம் அதிகளவில் இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இதே ரீதியில் தொடர்ச்சியாக மழை பெய்தால், பில்லூர் அணை ஓரிரு தினங்களில் நிரம்பும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.