நமது ராணுவத்தையும், வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு: மோடி

அம்பாலா(ஹரியாணா): நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜூன் 4 ஆம் தேதிக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டார்கள். ஆனால், அவர்களை தேர்தல் களத்தில் மக்களே தோற்கடித்துள்ளனர்.

ஹரியாணா தேசபக்திமிக்க மாநிலம். தேச விரோத சக்திகளை ஹரியாணா நன்கு அறிந்திருக்கிறது, அவர்களுக்கு உரிய பாடங்களை கற்பித்திருக்கிறது. 70 ஆண்டுகளாக இந்தியாவைத் துன்புறுத்தி, கையில் வெடிகுண்டு வைத்திருந்த பாகிஸ்தான், இன்று பிச்சைக் கிண்ணத்தை கையில் ஏந்தி இருக்கிறது. பலமான அரசு இருக்கும் போது எதிரி இப்படித்தான் நடுங்குகிறான். மோடியின் வலிமையான அரசு, சட்டப்பிரிவு 370 எனும் சுவரை இடித்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. நாட்டின் முதல் ஊழலை காங்கிரஸ், இந்திய ராணுவத்தில்தான் செய்தது. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ராணுவத்தில் ஊழல் செய்யும் ‘சாதனையை’ காங்கிரஸ் தொடர்ந்து செய்தது. போஃபர்ஸ் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என்று காங்கிரஸ் ராணுவத்தில் செய்த ஊழல்கள் பல. வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி என்ற பெயரில் பெரும் பணம் சம்பாதிப்பதற்காக காங்கிரஸ்காரர்கள் இந்திய ராணுவத்தை பலவீனமாக வைத்திருந்தனர். நமது ராணுவ வீரர்களுக்கு சரியான உடைகள், காலணிகள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் கூட கிடைக்கவில்லை. அவர்களிடம் நல்ல துப்பாக்கிகள் கூட இல்லை.

இந்தியாவின் படைகளை தன்னிறைவு பெறச் செய்ய நான் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினேன். இன்று ராணுவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பெறுகிறது. ஒரு காலத்தில் மற்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதியுடன் நான் பணிகளை மேற்கொள்கிறேன். வளர்ந்த இந்தியாவுக்கு ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் எனும் 4 தூண்கள் உள்ளன. இந்தியா வலுப்பெற வேண்டும் என்பதற்காக அவர்களை பலப்படுத்தும் பணியை நான் செய்கிறேன்.

விவசாயிகள் நலனே எனது முன்னுரிமை. காங்கிரஸ் காலத்தில், 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில், ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தானியங்கள் மட்டுமே, நாட்டின் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து ரூ. 20 லட்சம் கோடிக்கு தானியங்களை குறைந்த விலையில் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம்.

காங்கிரஸுக்கு வாக்குகள் மட்டுமே முக்கியம். டெல்லியிலும் ஹரியாணாவிலும் அவர்கள் கைகளில் துடைப்பத்துடன்(ஆம் ஆத்மியின் சின்னம்) சுற்றித் திரிகிறார்கள். பஞ்சாபில் துடைப்பக்காரனைத் திருடன் என்று சொல்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் போர்க்களத்தில் இருந்து மரியாதையுடன் குரு கிரந்த் சாஹிப்பின் பதிப்புகளை தாயகம் கொண்டு வந்தது நமது அரசு” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.