காத்மாண்டு: இந்தியாவின் 4 மசாலா தயாரிப்புகள் தரமற்றவை எனக் கூறி, அவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
எம்டிஎச் (MDH) நிறுவனத்தின் மெட்ராஸ் கறி பொடி, சாம்பார் மசாலா பொடி, மிக்ஸ்டு மசாலா கறி பவுடர் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகியவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் நான்கு மசாலா கலவை தயாரிப்புகள் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் தடை விதிக்கப்படுவதாக நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நான்கு பொருட்களிலும் எத்திலீன் ஆக்சைட்டின் எச்சம், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உணவு ஒழுங்குமுறை சட்டப்படி, அவற்றை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த பொருட்களை சந்தையில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று நேபாளத்தின் உணவு தரக் கட்டுப்பாட்டு கண்காணிப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் சில மசாலாப் பொருட்களின் விற்பனையை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை கடந்த மாதம் நிறுத்தின. அதிகப்படியான எத்திலீன் ஆக்ஸைடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதாலும், அவற்றின் அளவு இந்த மசாலாக்களில் அதிகம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் உள்ள பல்வேறு பிராண்டுகளின் தூள் மசாலாப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தொடங்கியுள்ளது. ஏற்றுமதிக்கான மசாலாப் பொருட்களில் உள்ள எத்திலீன் ஆக்சைடு மாசுபாடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் மசாலா ஏற்றுமதி கிட்டத்தட்ட 40% குறையும் என்று இந்திய மசாலா தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு (FISS) நேற்று (வெள்ளியன்று) கூறியது.
2021-22 ஆம் ஆண்டில் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட மசாலா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சுமார் 180 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகின் முன்னணி மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று இந்திய மசாலா வாரியம் தெரிவித்துள்ளது.