உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவை கூட்ட ஒரு கல்விக் குழுமம் பின்பற்றும் உத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உ.பி தலைநகர் லக்னோவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலுக்கு மறுநாளான மே 21-ல் ஆசிரியர் பெற்றோர் கூட்டங்கள் எங்களது அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும். இங்கு வந்து தாங்கள் வாக்களித்த அடையாள மையை காட்டும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு அடுத்த தேர்வில் கூடுதலாகப் 10 மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் ஊர்வலம்: இதேபோல் இந்த கல்வி குழுமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், இதர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தேர்தலில் வாக்களித்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் அறிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல், வாக்குப்பதிவு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயின்ட் ஜோசப் பள்ளிகள் தங்கள் மாணவ, மாணவிகளுடன் தேசியகொடியை ஏந்தி முக்கிய சாலைகளில் ஊர்வலம் நடத்தின.
இதில் பள்ளிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வாலுடன் இயக்குநர் நர்மதா அகர்வால் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். லக்னோவில் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.