மும்பை: வளர்ந்த இந்தியா தூதர்கள் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்திய ரயில்வேயில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முந்தைய அரசு ரயில்வே துறையைபால் கறக்கும் பசுவாகத்தான் பார்த்தது. ஆனால், மோடி ஆட்சியில் ரயில்வே முழு வளர்ச்சியடைந்தது.
தற்போது நாள் ஒன்றுக்கு 4 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 5,300 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைஅமைத்தோம். இது சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த ரயில் நெட்வொர்க்குக்கு இணையானது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் நெட்வொர்க்குக்கு நிகரானது.
கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ்ஆட்சியில் 20,000 கி.மீ தூரத்துக்குமட்டுமே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. ரயில்வேயில் தற்போது 100 சதவீத மின்மயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
நாடு முழுவதும் 300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 120 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.