பாகிஸ்தான் புகழ் பாடுபவர்களுக்கு இங்கு இடமில்லை – யோகி ஆதித்யநாத்

மும்பை,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மராட்டியத்தில் 5-ம் கட்ட தேர்தலையொட்டி மும்பை, மாலேகாவ், பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

பிரசாரத்தின் போது பேசிய அவர், “பா.ஜனதா ஆட்சிக்காக மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. வளர்ந்த இந்தியாவை உருவாக்க தேர்தலில் நிற்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைவர், கொள்கை, நோக்கம் கிடையாது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல உள்ளது. காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்புகிறது. வாரிசுரிமை வரி முகலாய மன்னர் அவுரங்சீப்பால் அமல்படுத்தப்பட்ட ஜிஸ்யா வரியை போன்றது. அவுரங்கசீப்பின் ஆன்மா காங்கிரசுக்குள் புகுந்துவிட்டது.

‘இந்தியா’ கூட்டணிக்கு தேர்தல் வெற்றி என்பது நாட்டை கொள்ளையடிக்கும் ஒரு வழி. ஆனால் பா.ஜனதா நாட்டை வலிமையாக்குகிறது. 2014-க்கு முன்னர் இந்து பண்டிகைகளில் வன்முறை நிகழ்ந்து கொண்டு இருந்தது. எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வராமல் இருப்பதை ராமர் உறுதி செய்வார். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் அந்த நாட்டுக்கு சென்று பிச்சை எடுக்க வேண்டும். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை.

இந்தியாவில் சாப்பிட்டுவிட்டு பாகிஸ்தானின் புகழ் பாடுபவர்களுக்கு இங்கு இடமில்லை. பாகிஸ்தானின் மக்கள் தொகை 23 கோடி. ஆனால் மோடி 25 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு மேல் கொண்டு வந்து உள்ளார். மோடி 3-வது முறையாக பிரதமரான பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 6 மாதங்களில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்.

பாகிஸ்தானில் கொடூரமான பயங்கரவாதிகள் பலர் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டதாகவும், அதில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. நமது நாட்டினரை கொலை செய்தவர்களை நாங்கள் எப்படி விடுவோம்? நமது மக்களை கொலை செய்தவர்களை நாங்கள் வழிபட மாட்டோம். அவர்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.

உத்தரபிரதேசத்தில் மாபியாக்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தனர். நாங்கள் புல்டோசர் மூலம் அவர்களை கையாண்டு வருகிறோம். தற்போது அங்கு யாரும் வன்முறை பற்றி யோசிக்க முடியாது. உத்தரபிரதேசத்தில் ஒருவரும் ரோட்டில் தொழுகை நடத்த முடியாது. மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.