இமாச்சல பிரேதசம் சிம்லா மக்களைவ தொகுதிக்கு உட்பட்ட சோலன் மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயா தாகூர். திருநங்கையான பிறகு சிறுவயதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இவர் தற்போது இமாச்சல பிரேதசம் தேர்தல் ஆணையத்தின் நட்சத்திர பிரச்சாரகராக ஒளிர்கிறார்.
இது குறித்து மாயா தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஆணாகப் பிறந்தாலும் எனக்குள் இருக்கும் பெண்மையை நான் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டேன். இதனால் பள்ளியில் சக மாணவர்களால் ஏளனம் செய்யப்பட்டேன். ஆசிரியர்களும் என்னை உதாசினப்படுத்தினர்.
பள்ளி கழிப்பறையைப் பயன்படுத்த எனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வீட்டில் சொல்லி வருந்தியபோது ஏதோ பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கவே நான் பொய் சொல்வதாகப் புரிந்து கொள்ளப்பட்டது. எல்லாம் சேர்ந்து கடைசியில் பிளஸ் 1க்கு பிறகு மேற்கொண்டு படிக்க முடியாமல் இடைநின்று போனேன். வீட்டிலிருந்து என்னை துரத்தும்படி எனது பெற்றோருக்குச் சொந்த கிராமத்தினர் அழுத்தம் கொடுத்தனர்.
இவ்வளவு கொடுமைகளைக் கடந்து டெல்லியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைக்காக பணிபுரிய ஆரம்பித்தேன். மூன்றாம் பாலினத்தவருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைவது இவைதான் இன்று நம் முன்னால் இருக்கக் கூடிய முக்கிய சிக்கல்களாகும்.
வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் மிகுந்த கண்ணியத்துடன் நடத்தப்படுகின்றனர். அங்குள்ளது போன்றே இங்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கிட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் தான் விரும்பிய வாழ்க்கையை வாழும் உரிமை மூன்றாம் பாலினத்தவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.