நேற்றைய RCB – CSK அணிகளுக்கானப் பரபரப்பான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ப்ளேஆஃபிற்குள் நுழைந்தது பெங்களூரு.
சென்னை தொடர்ச்சியாக விக்கெட்களைப் பரிகொடுத்து கடைசி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்களை அடிக்காமல் தவறவிட்டு ப்ளேஆஃப் தகுதியை இழந்திருக்கிறது. கோலி (47), டு ப்ளெஸ்ஸி (54), பட்டிதார் (41) என ரன்களைக் குவித்து பெங்களூரு அணிக்கு பலம் சேர்த்திருந்தனர். பவுலிங்கில் யஷ் தயால், தனது சாமயர்த்தியமான ஸ்லோ பேஸ் பந்துவிச்சில் மிச்சல் மற்றும் கடைசி ஓவரில் தோனி என முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி இரண்டு பந்துகளிலும் அதே எதிர்பாராத ஸ்லோ பேஸில் இரண்டு டாட் பந்துகளை வைத்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திருந்தார். இதனால், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்று ப்ளேஆஃபிற்குத் தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பெங்களூரு அணி கேப்டன் டு ப்ளெஸ்ஸி, “எனக்குக் கிடைத்துள்ள இந்த ஆட்ட நாயகன் விருதை யஷ் தயாளுக்குக் கொடுக்க விரும்புகிறேன். முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அதைக் காப்பாற்றிவிட்டார் யஷ்.
மழை, ஈரமான பிட்ச், வழுக்கும் பந்து என மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இப்போட்டியிருந்தது. ரஞ்சியில் ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதுபோல் இருந்தது. நாங்கள் நீண்ட நேரமாகக் கேட்டும் ஈரமான வழவழப்பான பந்தை மாற்றாதவர்கள், இறுதி ஓவரில் தோனி பந்தை வெளியில் அடித்ததால் பந்தை மாற்றினார்கள். அதனால் அந்த ஓவரில் யஷ், தான் திட்டமிட்ட பந்துகளை மிகச் சரியாக வீசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த இரவு அற்புதமாக முடிந்திருக்கிறது. எங்களுக்கு ஆதரவான மக்கள் நிறைந்த மிக அற்புதமான சூழல் மைதானத்தில் இருந்தது. பெங்களூருவில் இந்த வெற்றியை அடைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி எங்களுக்கு. அடுத்தடுத்தப் போட்டிகள் இருக்கின்றன அதில் கவனம் செலுத்தி, இன்னும் அதிக உழைப்பைப் போட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.