ஸ்பெயின், போர்ச்சுக்கல் வான்பரப்பில் ஒளிர்ந்த நீலநிற விண்கற்கள்: வீடியோ வைரல்

நிலவு, நட்சத்திர ஒளிகள், தெருவிளக்கு வெளிச்சம் என இருக்கும் இரவு வானம் திடீரென நீலநிற ஒளியுடன் மிளிர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆச்சரிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மக்கள். இவ்விரு நாட்டு மக்களும் சனிக்கிழமை இரவு வானத்தில் திடீரெனத் தோன்றிய விண்கல், வான்பரப்பை நீல நிறத்தில் ஒளிரச்செய்த ஒரு கண்கவர் காட்சிக்கு சாட்சிகளாகி இருக்கின்றனர்.

திகைப்பூட்டும் இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் அதனைத் தங்களின் கேமிராக்களில் படம் பிடித்து சமூக ஊடங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படியான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள காலின் ரக் என்ற எக்ஸ் பயனர், தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்பெயின், போர்ச்சுக்கல் வான்பரப்பில் விண்கற்கள் தெரிந்தன. இது பைத்தியக்காரத்தனமானது. நீல ஒளிகள் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு இரவு வானத்தை ஒளிரச் செய்தன என்று ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

என்றாலும் இப்போது வரை அது பூமியின் எந்த பரப்பில் விழுந்தது என்று உறுதிப்படுத்தப்படவில்லை. காஸ்ட்ரோ டெயர் நகருக்கு அருகே அது விழுந்திருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைள் பின்ஹெய்ரோவுக்கு அருகில் இருந்ததாக கூறுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

காலின் ரக்கின் பதிவு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு பலர் எதிர்வினையாற்றியுள்ளனர். பயனர் ஒருவர் “மிகவும் சிலிர்ப்பூட்டக்கூடியது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “இது முற்றிலும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்” என்றும், மற்றொருவர், “வாழ்வில் ஒரே முறை நிகழும் நிகழ்வு” என்றும் தெரிவித்துள்ளனர்.

நான் பார்த்தவற்றிலேயே இதுதான் மிகவும் வினோதமான விண்கல் காட்சி. இதை நேரில் பார்ப்பது மனதை மயக்குவதாய் இருக்கும் என்று நான் அடித்துக்கூறுவேன்” என்று ஒருவர் கருத்திட்டுள்ளார். மற்றொருவர், “என்ன ஒரு காட்சி, உண்மையிலேயே அற்புதமானது” என்று தெரிவித்துள்ளார்.

நாசாவின் கூற்றுபடி, “விண்ணில் உள்ள கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் வேகமாக நுழைந்து எரியும் அந்த நெருப்புக்கோளம் அல்லது எரிநட்சத்திரம் விண்கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. விண்வெளி பாறைகள், பெரிய அளவிலான தூசுகள், சிறுகற்கள் போன்றவை எரியும் போது அவ்வாறு ஒளி உண்டாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.