Dhoni : ஆர்சிபிக்கு கைகொடுக்க மறுத்து வெளியேறிய தோனி? – களத்தில் நடந்தது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியை பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆப்ஸூக்கு சென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்காமல் தோனி அவமதித்துவிட்டார் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் என்ன நடந்தது?

வைரலாகும் வீடியோவில் பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுக்க தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் வரிசையில் நிற்கின்றனர். தோனி முதல் ஆளாக நிற்கிறார். ஆனால், திடீரென தோனி வரிசையிலிருந்து வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிடுகிறார். இந்த வீடியோவை வைத்துக் கொண்டுதான் தோனிக்கு பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுக்க கூட மனமில்லை. அவருக்கு பொறாமை. இவ்வளவு அனுபவம் இருந்தும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு தோனி நடந்துகொள்ளவில்லை என எக்கச்சக்கமான விமர்சனங்களை தோனி மீது முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் முன்னாள் வீரர் மைக்கேல் வாஹனும் க்ரிக்பஸ் இணையத்தில் பேசியிருக்கின்றனர்.

தோனி நீண்ட நேரமாக பெங்களூரு வீரர்களுக்காக காத்திருந்ததாகவும் ஆனால் அவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இதையெல்லாம் மறந்து சென்னை வீரர்களை காக்க வைத்ததாலயே தோனி கைகொடுக்காமல் சென்றதாகவும் கூறியிருக்கின்றனர். இதுபற்றி ஹர்ஷா போக்ளே பேசுகையில்,

Harsha Bhogle

‘நீங்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை வென்றாலும் கூட எதிரணி வீரர்களுக்கு கைக்கொடுத்துவிட்டு கொண்டாடச் செல்லலாம். எதிரணி வீரர்களுக்கு கைகொடுத்து விடைபெறுவது இந்த விளையாட்டின் மகத்தான விஷயம். நமக்கிடையே இருக்கும் போட்டியெல்லாம் முடிந்துவிட்டது இது ஒரு விளையாட்டுதான் என்பதைக் குறியீடாக கைகொடுத்தலின் மூலம் உணர்த்த முடியும்.’ என்றார்.

மைக்கேல் வாஹன் பேசுகையில், ‘தோனி ஒரு ஜாம்பவான். ஒரு சகாப்தம். அவர் ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். உங்களுக்கு கைகொடுக்க காத்திருக்கிறார். நீங்கள் ஓடிவந்து அவருக்கு கைகொடுத்து விட்டு மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடலாம். அந்த விழிப்புணர்வு பெங்களூரு வீரர்களிடம் இல்லை.

நான் ஒரு ஆர்சிபி வீரராக இருக்கும்பட்சத்தில் நாளை காலை எழுகையில் தோனி ஓய்வை அறிவித்திருந்தால் தோனிக்கு கை கூட கொடுக்காமல் வந்துவிட்டுமோ என்கிற வருத்தமே மிஞ்சும்.’ என்றார்.

தோனி இந்த மாதிரியான விஷயங்களிலெல்லாம் கவனமாக இருக்கக்கூடியவர். அனுபவமிக்க கிரிக்கெட் வீரர் கைகொடுக்காமல் செல்வதற்கெல்லாம் வாய்ப்பு மிகக் குறைவு. அப்படிப்பட்டவர் ஆர்சிபி யை அவமதிக்க எண்ணி இப்படி செய்திருப்பார் என்பதெல்லாம் சமூகவலைதள கட்டுக்கதைகளாகவே இருக்கும். தோனி காயத்தால் அவதிப்படுகிறார். நேற்றைய போட்டியில் அப்போதுதான் பேட்டிங் ஆடிவிட்டும் வந்திருக்கிறார் எனும்போது அவர் உடல்ரீதியாக எதுவும் அசௌகரியத்தை உணர்ந்திருக்கக்கூடும். அதனால் கூட வெளியேறியிருக்கலாம்.

ஆர்சிபி அணியை அவமதிக்க நினைத்திருந்தால் அவர்களின் பயிற்சியாளர் குழுவுக்கு மட்டும் ஏன் கைகொடுக்கிறார்? சமூக வலைதளங்களில் ரசிக சண்டைகளுக்கு தீனி போடுவதைத் தாண்டி அந்த வீடியோக்களில் பெரிதாக எதுவுமில்லை. எந்த அணியின் வீரராக இருந்தாலும் இது போன்ற விவாதங்கள் வீரர்களின திறமைக்கும், புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.