ஈரான் அதிபர் மரணம்: மேற்கு ஆசிய அரசியலில் ஏற்படப் போகும் தாக்கம் என்ன?- ஓர் அலசல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில், உலகின் மற்ற நாடுகள் இதன் பின்விளைவுகளையும் புவிசார் அரசியலில் ஏற்படும் தாக்கங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறன.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு என்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மத்தியில், தனது பழைய பகையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஆனால், இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு சிஸ்டம் காரணமாக பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

பதிலடியாக ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் உலகம் முழுவதும் அச்சம் நிலவியது. இப்படியான சூழலில் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்து செய்தி ஊகங்களை தூண்டியுள்ளது.

இதுவரை, அரசு ஊடகங்களில் செய்திகள் விபத்து என்று குறிப்பிடப்பட்டாலும், ஈரான் அரசு சார்பாக எந்த பிரதிநிதியும் விபத்து என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை, இது விபத்து அல்ல என்பது போல் ஈரான் அரசு தெரிவிக்கும் பட்சத்தில் அது மேற்கு ஆசியாவில் பதற்றத்துக்கு வழிவகுக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

எதிர்வினையாற்றாத அமெரிக்கா: ஈரானின் எதிரி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா இதுவரை இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், ஜோ பைடனுக்கு இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் அமெரிக்கா கூறியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான மோதலில் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார்.

இதன்பின் இப்ராஹிம் ரெய்சி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி, பொருளாதார தடைகளை நீக்கவும், அதற்கு நிவாரணம் பெறவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இஸ்ரேல் உடனான மோதல் இதற்கு பின்னடைவாக அமைந்தன. இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியது. எனினும், ஜோ பைடன் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தாக்குதல்களை தவிர்க்க ஈரான் அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இப்படியான நிலையில்தான் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பையும், அதன்பின்னணியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது அமெரிக்கா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.