புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.53 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 61.26 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலம், யூனியன் பிரதேசம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
- உத்தரப் பிரதேசம்: 47.55%
- மகாராஷ்டிரா: 38.77%
- மேற்கு வங்கம்: 62.72%
- பிஹார்: 45.33%
- ஒடிசா: 48.95%
- ஜார்க்கண்ட்: 53.90%
- ஜம்மு காஷ்மீர்: 44.90%
- லடாக்: 61.26%
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இன்றைய தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மும்பை ஏமாற்றம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மதியம் 3 மணி வரை வெறும் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இத்தனைக்கும் காலையிலேயே தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர்கள் அக்ஷய் குமார், திரைப் பிரபலங்கள் ஜோயா அக்தார், ஃபர்ஹான் அக்தார் உள்ளிட்டோர் வாக்களித்திருந்தனர். இருப்பினும் நேரம் செல்லச் செல்ல மும்பையில் வாக்குப்பதிவு வேகம் தேங்கியது. இதனால் 3 மணி வரை பெரும் நகரான மும்பையில் வெறும் 40 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவாகியுள்ளது.
தேர்தல் வன்முறைச் சம்பவங்களைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே சில சிறிய சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். அதேபோல் ஒடிசா, மேற்குவங்கத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.