எல்லே குணவம்ச நாயக்க தேரரின் ஆலோசனையில், பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்த வருட வெசாக் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வருட வெசாக் பண்டிகையை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவும், அதற்கான ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொழும்பு 07 பௌத்தலோக மாவத்தை தர்மயாதனவில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெசாக் பண்டிகைக்காக, புத்தசாசன அமைச்சின் ஒருங்கிணைப்புடன், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆளுநர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் அனைத்து பிரதே சபை செயலாளர்களுக்கும் அரச வெசாக் பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அந்த சுற்றறிக்கைக்கு அமைய, இவ்வருட வெசாக் பண்டிகைக்காக எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் பண்டிகை தொடர்பான பிரதான அரச விழா மாத்தளையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் விலங்குகள் அறுப்பதை தடை விதித்தும், இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து பல்பொருள் அங்காடிகள் உட்பட அனைத்து இறைச்சிக் கடைகளையும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகளையும் (Club) மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் அந்த சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.