வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாக சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து `கொட்டுக்காளி’, `கருடன்’ என தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் சூரி.
இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு நடிகர் சூரியை வாழ்த்திப் பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில் தான் கதாநாயகனாக அவதாரம் எடுத்தது குறித்தும் ‘கருடன்’ திரைப்படம் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் நடிகர் சூரி. இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “வெற்றி அண்ணன் கொடுத்த வாய்ப்பைத் தக்க வைக்க முடியும்னு நம்புனேன். என்னுடைய ரசிகர்கள் என்னை ஓட வச்சிருவாங்க. இன்னைக்கு இங்க கிடைக்கிற விசில் சத்தம் எல்லாம் வெற்றி மாறன் அண்ணனாலதான். விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின்னு என் சினிமா வாழ்வைப் பிரிக்கலாம். இன்னைக்கு இந்தியாவுல எங்க போய் வடை சாப்பிட்டாலும் அங்க இருக்கிற பேப்பர்ல சேது மாமா முகம்தான் இருக்கு. ரூபாய் நோட்டுல இருக்கிற எல்லா மொழியிலேயும் நடிச்சுட்டு இருக்காரு.
இந்தப் படத்துல சசிகுமார் நடிக்க வைக்கலாம்னு சொன்னாங்க. மதுரைக்காரன் பழக்க வழக்கதுக்கு என்னனாலும் பண்ணுவான். அதே மாதிரி அவர் நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டார். ‘கருடன்’ல நான் கதையின் நாயகனாக நடிக்கலாம். ஆனா, எனக்கு சுந்தரபாண்டியன்ல நடிச்ச மாதிரிதான் இருந்துச்சு. விடுதலை படத்தோட வாய்ப்பு கிடைச்சதும் என் குடும்பத்துல சொன்னதுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தம்பி கிட்டதான் சொன்னேன்.
இதுக்குப் பிறகு வண்டி ஓடுமான்னு சந்தேகம் இருக்குனு தம்பிகிட்ட சொன்னேன். அவர் வெற்றி மாறன் சார் வேற மாதிரி மாத்திடுவாருன்னு சொன்னாரு. இப்போ எனக்காக ‘கொட்டுக்காளி’ படத்தைத் தயாரித்துக் கொடுத்திருக்கார்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.