புவனேஸ்வர்: புரி ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் பேச்சை, பிஜு ஜனதா தளம் அரசியலாக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புரி ஜகந்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறிவிட்டதாகவும், அதற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். வெயிலும் தூசியும் அதிகம் இருப்பதால் சம்பித் பத்ரா தனது உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டு அவர் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், அவர் மயக்கம் அடையக் கூடாது. அவர் ஒரு மருத்துவர், எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிஜு ஜனதா தளம் ஒருபோதும் மதத்தைக் கொண்டு அரசியல் செய்வதில்லை. பகவான் ஜெகந்நாதர் எப்போதும் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டும். பகவான் அழியாதவர். நாம் அழியக்கூடியவர்கள். நாம் ஏன் இருவரையும் கலக்க வேண்டும்? மதத்தையோ, மகாபிரபு ஜெகநாதரையோ தேர்தலில் இழுப்பதை பிஜு ஜனதா தளம் விரும்பாது. ஆனால், பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. 2019 பஞ்சாயத்துத் தேர்தலிலும் அப்படித்தான் செய்தார்கள். எப்பொழுதும் எதையாவது மதத்துடன் இணைக்கிறார்கள்” என வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜகந்நாதர் குறித்த சம்பித் பத்ராவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், நேற்று (திங்கள்) வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாபிரபுவை (ஜகந்நாத்) ஒரு மனிதரின் பக்தன் என்று அழைப்பது இறைவனை அவமதிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சம்பித் பத்ராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அதிகார போதையில் இருக்கும் பாஜக, இந்திய மக்களை மட்டுமல்ல, நமது கடவுள்களைக் கூட விட்டுவைக்காது என்ற எங்கள் குற்றச்சாட்டை இது வலுப்படுத்துகிறது” என்று கூறினார். சம்பித் பத்ராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புவனேஸ்வரில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார், சம்பித் பத்ரா தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, புரி ஜகந்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறியதற்காக மன்னிப்பு கோருவதாக புரி தொகுதியின் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “புரியில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய ரோட் ஷோ நடந்தது. இது மாபெரும் வெற்றி பெற்றது. ரோட்ஷோவுக்குப் பிறகு நான் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். நரேந்திர மோடி, ஜகந்நாதரின் தீவிர பக்தர் என்றும், மகாபிரபு ஜெகந்நாதரை அவர் பெரிதும் மதிக்கிறார் என்றும் நான் எல்லோரிடமும் கூறியுள்ளேன்.
ஆனால், தவறுதலாக, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதற்கு நேர்மாறாக ஜகந்நாதர் மோடியின் பக்தர் என்று சொன்னேன். இது ஒரு பெரிய தவறு. ஆனால் என் இதயத்தில் அத்தகைய எண்ணம் இல்லை. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அறியாமல்கூட நாம் மஹாபிரபு ஜகந்நாதரை காயப்படுத்தக்கூடாது. அவரைப் பற்றி இப்படிச் சொல்லவும் முடியாது. நான் தவறாகப் பேசியதால், அவருடைய காலடியில் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிப்பின் ஒரு பகுதியாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறி இருந்தார்.