17- வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
14 லீக் ஆட்டங்களில் விளையாடிய கொல்கத்தா அணி ஒன்பது வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முதலில் தகுதி பெற்ற அணியும் கொல்கத்தாதான். இந்த அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கவுதம் கம்பீர் வீரராக ஆடிய காலத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இரண்டு முறை அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர்,” நான் சிரிப்பதில்லை, எப்போதும் முகத்தை விறைப்பாக வைத்திருக்கிறேன் என பலரும் சொல்வதை கேட்டிருக்கிறேன். நான் சிரிப்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவதில்லை. போட்டியில் வெல்வதை பார்க்கவே வருகிறார்கள்.
நான் பொழுதுபோக்குத் துறையில் இல்லை, பாலிவுட் நடிகர் கிடையாது. கிரிக்கெட் துறையில் இருக்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வெற்றியுடன் டிரெஸிங் ரூம் திரும்ப வேண்டும் என்பதை மட்டுமே எனது நோக்கமாக வைத்திருக்கிறேன்.’ என்று பேசியிருக்கிறார்.
கவுதம் கம்பீர் எப்போதுமே சீரியஸான முகத்துடனேயே இருக்கிறார் என பல வீரர்களும் ரசிகர்களும் விமர்சனம் செய்தது உண்டு. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கையில்தான் கம்பீர் அந்த விமர்சனங்களுக்கான பதிலை அளித்திருந்தார்.