‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்து ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ சென்னை ஐ.ஐ.டியால் தொடங்கப்பட்டிருப்பது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்துவருகிறது.
இந்திய திரையிசையின் தவிர்க்க முடியாத பெயர் இளையராஜா. தன் திறமையால் லட்சக்கணக்கான மக்களை தன் ரசிகர்களாகக் கொண்டிருந்தாலும், தன்னைப் பற்றி விமர்சனங்கள் வந்தபோதிலும் ‘மற்றவர்களை கவனிப்பது தன் வேலை இல்லை, தன்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே தன் வேலை’ என்று கூறியவர், “நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த ஒரு மாத காலத்தில் சிம்பொனியே எழுதி முடித்துவிட்டேன்” என சமீபத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்து வாயடைக்கவைத்தார்.
அதிலிருந்து, மீள்வதற்குள் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ துவங்கப்பட்டிருப்பது, ‘என்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே என் வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமா போயிட்டு இருக்கேன்’ என்று அவர் சொன்னதை நினைவூட்டி பிரமித்துவைத்துள்ளார். இளையராஜாவுடன் இணைந்திருப்பது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியிடம் பேசினேன்…
“ஐ.ஐ.டியில் இசை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்துக்கிட்டிருக்கோம். புதிய இசைக் கருவிகளை கண்டுபிடிப்பது, இசையால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள், AI மூலம் இசையை உருவாக்குவது என இசைத் துறையில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் அடிப்படையா வெச்சுக்கிட்டு, ஐ.ஐ.டியில் இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கணும்னு முடிவு பண்ணினோம். அனைவருக்கும் ஐ.ஐ.டி போல அனைவருக்கும் இசையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்களோட நோக்கம். அப்படி யோசிச்சதுமே மனசுல உடனே தோன்றியவர் ‘இசைஞானி’ இளையராஜா சார்தான். இசையில இருக்கிற கடினமான ராகங்களைக்கூட சாதாரண மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தவர் அவர்தான்.
காசி தமிழ்ச் சங்க விழாவை பனாரஸ் யுனிவர்சிட்டியுடன் சேர்ந்து நாங்கதான் நடத்தினோம். அப்போ, இளையராஜா சாரை மீட் பண்ணி இந்த விஷயத்தை சொன்னேன். அவர், ரொம்ப உற்சாகமாகி ‘நல்ல விஷயம். உடனே பண்ணலாம்’னு சொன்னாரு. வெளிநாட்டு இசைக்கு உலக அளவுல கவனம் இருக்கு. நம்ப நாட்டுல உலகாளாவிய இசையும் இசையமைப்பாளர்களும் இருக்காங்க. ஆனா, அந்தளவுக்கு வெளியில தெரியல. நம்ப நாட்டுல உலகளவிலான இசை மேதைகளை உருவாக்கணும், வெளியுலகுக்குத் தெரியப்படுத்தணும். அதோட, இசை மூலமா இன்ஜினீயரிங்ல புது கண்டுபிடிப்புகள் வரும்ங்குறது என் எண்ணம். இசை கேட்குறது மூலமா கற்பனை திறன் அதிகரிக்கும். அதனாலதான், அவருடன் இணைந்து இப்படியொரு புதிய ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியிருக்கோம்” என்பவரிடம், “இளையராஜாவின் மிகப்பெரிய சாதனையா நீங்க எதை கருதுறீங்க?” என்று கேட்டபோது,
“நானும் சங்கீதம் கற்றிருக்கேன். வயலின் எல்லாம் வாசிப்பேன். இசையில ஹம்சவர்த்னி, இந்தோளம்னு நிறைய கஷ்டமான ராகங்கள் இருக்கு. அதையெல்லாம் அவர் அழகா மெருகேற்றி, பிரமாதமா சினிமாவுல கொண்டு வந்திருக்காரு. குறிப்பா,
‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாட்டு ரீதிகெளளை ராகத்துல அமைச்சிருப்பார். அதேமாதிரி, ‘கடவுள் அமைத்த மேடை’ படத்துல ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ பாடலை ஹம்சத்வனி ராகத்தில் அமைச்சிருப்பார்.
இந்த ராகமெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமான ராகங்கள். இதையெல்லாம் சினிமாவுல கொண்டுவந்து ரசிக்க வைக்கிறது ஈஸியான விஷயம் கிடையாது. ஆனா, இளையராஜா சார், இதையெல்லாம் ரொம்ப ஈஸியா கொண்டுவந்து ரசிக்கவெச்சார். இதையெல்லாம் தாண்டி நான், இளையராஜா சாரோட தீவிர ஃபேன். 75- 80 கள் காலக்கட்டங்களில் அவருடைய பாடல்களைத்தான் விரும்பி கேட்பேன். ‘சலங்கை ஒலி’ படத்துல ‘வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ பாட்டும், ‘தாய் மூகாம்பிகை’ படத்துல ‘ஜனனி ஜனனி.. ஜகம் நீ அகம் நீ’ பாட்டும் என்னோட ஃபேவரைட். நேற்று தொடக்கவிழாவுலக் கூட ‘மேடையில அந்தப் பாட்டை பாடச்சொல்லி கேட்டுக்கிட்டேன். அவரும் பாடி சந்தோஷப்படுத்தினாரு.
ஒரு காலத்துல இளையராஜா சாரை பார்க்கமுடியுமான்னு ஏங்கின நாட்கள் உண்டு. ஆனா, இன்னைக்கு அவரோட மேடையில உட்கார்ந்திருக்கிறதை பெரும் பாக்கியமா கருதுறேன். அதேமாதிரி, ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்கினதுக்கு பயங்கரமான வரவேற்பு கிடைச்சிருக்கு. இதோட தொடக்கவிழாவுல 2500 பேர்கிட்ட வந்திருந்தாங்க. சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இதுல, டிகிரி படிப்பையும் கொண்டுவரப்போறோம்” என்கிறார், உற்சாகமாக.