மற்ற போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஐ.பி.எல்.-ல் மட்டும் ஆடுவது கடினம் – டோனி கருத்து

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனி 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். 42 வயதான அவர் இந்த சீசன் தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். இறுதி கட்டத்தில் மட்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கிய டோனி அதிரடியாக சிக்சர்களை விளாசியதுடன் மொத்தம் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.50 ஆகும். அவர் தொடர்ந்து ஆடுவாரா? அல்லது இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் டோனி யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘கடினமான விஷயம் என்னவென்றால் ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. ஆனாலும் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டி இருக்கிறது.

தொழில்முறை போட்டியில் விளையாடுவது என்பது எளிதானது கிடையாது. இங்கு வயதை பார்த்து உங்களுக்கு யாரும் சலுகை காட்டமாட்டார்கள். நீங்கள் விளையாட வேண்டும் என்றால் உங்களுடன் விளையாடும் மற்ற வீரர்களை போல் சிறந்த உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். எனவே உணவு பழக்கம், கொஞ்சம் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தியாக வேண்டும். நான் சமூக வலைதளத்தில் இல்லாதது நல்ல விஷயமாகும்.

அதனால் எனக்கு கவனச் சிதறல் குறைவு. சர்வதேச போட்டியில் இருந்து விலகியதும் எனது குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவிட விரும்பினேன். அதே நேரத்தில் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க எனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்த நினைக்கிறேன். என்னை பொறுத்தமட்டில் விவசாய பண்ணை, மோட்டார் சைக்கிள், பழமை வாய்ந்த கார்கள் ஆகியவற்றை அதிகம் விரும்புபவன். இந்த விஷயங்கள் எனக்கு மன அழுத்தத்தை குறைக்கக்கூடியவை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் எனக்கு பிடித்தமான வாகனங்களில் சென்று சில மணி நேரங்களை செலவிடுவேன். அதன் பிறகு திரும்பி விடுவேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.