புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் ஏஎஸ்ஏ களஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மசூதி, சம்ஸ்கிருத பாடசாலையாக, ஒரு ஜெயின் கோயிலுடன் செயல்பட்டு வந்ததாக புகார் கிளம்பியுள்ளது.
அஜ்மீர் நகரில் பழம்பெருமை வாய்ந்த காஜா மொய்னுத்தீன் சிஷ்டி தர்கா அமைந்துள்ளது. இதன் பின்புற சாலையில், ‘அடை தின் கீ ஜோப்டா (இரண்டரை நாளில்கட்டப்பட்ட கூரை)’ எனும் ஒரு மசூதியும் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மசூதி, இந்தோ இஸ்லாமிக் கட்டிடக் கலையுடன் கூடிய பெரிய வளாகத்தில் காணப்படுகிறது. அடிமை வம்சத்தின் அரசர்குத்புதீன் ஐபக்கால் கி.பி.1199-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுள் அமைந்த மசூதியில் நாடு சுதந்திரம் பெறுவது வரை முஸ்லிம்கள் தினமும் 5 வேளை தொழுகை நடத்தி வந்ததாகவும் அது தற்போது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
வரலாற்றுச் சின்னமான இந்த மசூதி, இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (ஏஎஸ்ஐ) பராமரிப்பில் உள்ளது. இங்கு இரண்டுதினங்களுக்கு முன் திகம்பர் ஜெயின் சமூகத்தின் குருவான சுனில் சாகர் மஹராஜ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்தார். தங்கள் ஆன்மிக முறைப்படி, முழுநிர்வாண கோலத்தில் அவர் இருந்தார். உள்ளே சென்றவர் சுமார் ஒருமணி நேரம் தங்கியபின் வெளியில் வந்தார். பிறகு அவர், மசூதி குறித்து எழுப்பிய ஒரு புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சுனில் சாகர் மஹராஜ் கூறும்போது, “இந்த மசூதி முற்காலத்தில் சம்ஸ்கிருதப் பாடசாலையாக செயல்பட்டு வந்தது. இதனுள் இருந்த ஒரு ஜெயின் கோயிலும் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே, இதை மீண்டும் சம்ஸ்கிருதப் பாடசாலையாக மாற்றி செயல்பட வைப்போம்” என்றார்.
இந்தப் புகாரை ஏற்கும் வகையில் அஜ்மீர் மாநகராட்சி துணை மேயர் நீரஜ் ஜெயின் கூறும்போது, “இந்த வளாகத்தின் பாதுகாப்பு அறையில் அங்கு இடிக்கப்பட்ட ஜெயின் கோயிலின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மசூதியை அகற்றி அங்கு மீண்டும் சம்ஸ்கிருத பாடசாலை அமைக்க நாங்கள் பல ஆண்டுகளாக கோரி வருகிறோம்”என்றார்.
இந்நிலையில், அஜ்மீரின் இந்த மசூதியிலும் ஏஎஸ்ஐ களஆய்வு நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாராணசி, மதுரா உள்ளிட்ட இடங்களின் மசூதிகள் மீதான புகார்களை போல் இங்கும் பிரச்சினை கிளம்பத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி கூறுகையில், ‘‘இந்த மசூதியினுள் கள ஆய்வு நடத்த ஏஎஸ்ஐயிடம் கோருவோம்” என்றார்.