நடுவானில் குலுங்கிய விமானம்: ஒருவர் பலி – பலர் காயம்

பாங்காக்,

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-SQ321 என்ற விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காயமடைந்த பயணிகளுக்கு பாங்காக் விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகளை மீட்க ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிற்பதை காணமுடிந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.