முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடக்கிறது.
முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழா தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்டால் கிடைக்கும் பலன் ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதிகம்.
விசாகத் திருவிழாவான இன்று (22-ம்தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிக்கால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்பத்தில் எழுந்தருள்கிறார்.
அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்க இருக்கிறது. நாளை(23-ம்தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்க இருக்கின்றன.
விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி ரோட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருக்கோயில் வளாகம், நாழிக்கிணறு, கடற்கரை எனத் திரும்பும் திசையெங்கும் பக்தர்களின், ‘அரோகரா’ கோஷம் விண்ணை முட்டுகிறது. கடற்கரையில் வேல், முருகப் பெருமானின் முகம் போன்ற வடிவங்களை மணலில் செய்து மாலை அணிவித்துத் தேங்காய் பழம் உடைத்து சூடன் கொளுத்தியும் வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள்.
கடந்த சில நாள்களாகப் பருவநிலை மாற்றத்தினால் உடலில் அரிப்பினை ஏற்படுத்தும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. இதனையடுத்து பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போதும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருவதால் பாதுகாப்பாகக் குளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்கள், விசாகத் திருவிழாவிற்கு மறுநாளான நாள் மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சிகளை வாங்கிக் கோயில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு விரதத்தினை நிறைவு செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விசாக நட்சத்திரத்தில்தான் தாமிரபரணி நதி பிறந்தது என்று தாமிரபரணி மகாத்மியம் நூலில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே முத்தாலங்குறிச்சியில் குணவதியம்மன் கோயில் மிகவும் பழைமையானது. இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றினை நோக்கி வடமுகமாக உள்ளது. எனவே இதைக் காசிக்கு நிகரான தீர்த்தம் என்று கூறுவார்கள். இக்கோயிலில் தாமிரபரணி பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
இன்று குணவதி அம்மன் கோயில் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி நதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக குணவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து குணவதி அம்மன் சந்நிதானத்தில் இருந்து கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுத் தாமிரபரணி நதிக்கு சந்தனம், பன்னீர் உள்பட 21 அபிஷேகம் நடந்தன. அதன்பின் கும்ப அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு சிறப்புப் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.