Yash Dayal: “நாங்க யாஷோட மேட்ச் பார்க்க மாட்டோம்…”- யாஷ் தயாளின் பெற்றோர் பகிர்வு

“ஈ சாலா கப் நம்தே” என்று ஒவ்வொரு முறையும் கூச்சலிட்ட ஆர்.சி.பி அணியின் ரசிகர்களுக்கு இம்முறை கண்டிப்பாக ‘கப்’ நமக்குதான் என்று நம்பிக்கை தரும் வகையில், கடந்த 6 போட்டிகளில் அந்த அணி வெற்றியை மட்டுமே நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இறுதியாக மே 18 அன்று, சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி மேட்ச் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் ஆர்.சி.பி அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது மட்டுமில்லாமல், ப்ளே- ஆஃப்ஸ்-க்கும் முன்னேறியுள்ளது.

csk vs rcb

கடைசி ஓவரில் தோனியின் பேட்டிங், பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே பறக்க விட்டாலும், அடுத்த பால் மாற்றிய பிறகு தோனி அவுட். ஆர்சிபி வீரர் யாஷ் தயாளின் கடைசி 2 பந்துகள், ஜடேஜாவின் பேட்டிங்கில் தான் போட்டியின் முடிவு இருந்தது, மைதானம் முழுக்க திக் திக் நிமிடங்கள். கடைசி 2 பந்துகளையும் சமாளிக்க முடியாமல் சி.எஸ்.கே அணி வெளியேறியது.

மேன் ஆஃப் த மேட்ச் விருதை ஆர்.சி.பி அணியின் கேப்டன் டு ப்ளெஸ்சி வென்றாலும், “போட்டியின் சிறந்த வீரருக்கான விருதுக்குத் தகுதியானவர் யாஷ் தயாள்தான். கடைசி ஓவரில் அவர் இல்லையென்றால் நாங்கள் இப்போட்டியை வென்றிருக்க மாட்டோம்,” என்று கூறினார்.

ஆனால் ப்ரயாக்ராஜ்-ல் இருக்கும் யாஷ் தயாளின் குடும்பம் அவர் விளையாடிய போட்டியை பார்க்கவில்லை. காரணம், 2023 ஐ.பி.ல் தொடரில் நடந்த குஜராத் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயானப் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் குஜராத் அணி வீரர் யாஷ் தயாளுக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றிபெறச் செய்திருந்தார். இதற்கு பிறகு யாஷ் தயாள் அதிகமாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டார். வாட்ஸ்- ஆப் குழுக்களில் இவரின் குடும்பத்திற்கும் அதுபோன்ற செய்திகள் மற்றும் வீடியோக்கள் அதிகமாகப் பகிரப்பட்டன.

yash dayal parents

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய யாஷின் தந்தை சந்தரபால் , “எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் யாஷ் குறித்து ஒரு வீடியோ பகிர்ந்தார். அதில் ‘ப்ரயாக்ராஜ் ரயிலின் பயணம் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது’ என்று கூறியிருந்தார். அது எங்களுக்கு மிகவும் வேதனை அளித்தது. நாங்கள் அனைத்து வாட்ஸ்- ஆப் குழுக்களிலிருந்து வெளியேறினாலும் இது தொடர்பான செய்திகள் எங்களுக்கு வந்துக்கொண்டேதான் இருந்தது. இச்சம்பவத்திற்கு பிறகு யாஷும் ஒருமுறை “அப்பா! என்னுடைய கரியர் முடிந்துவிட்டதா?” என்று கேட்டான்.

இம்முறை ஆர்.சி.பி அணி யாஷை ரூ.5 கோடிக்கு எடுத்தபொழுதும், யாரோ ஒருவர் ‘பெங்களூரு அணி உரிமையாளர் 5 கோடி ரூபாயை சாக்கடையில் வீசியுள்ளார்’ என்று கூறி பதிவிட்டிருந்தார். அது எங்களுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே நாங்கள் கடைசியாக நடைபெற்ற சி.எஸ்.கே VS ஆர்.சி.பி போட்டியை முதலில் பார்க்கவில்லை. ஆனாலும் ஆர்வம் தாங்காமல் கடைசி ஓவரை மட்டும் பார்த்தோம். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடித்தவுடன், மேட்ச் பார்த்திருக்கக்கூடாதோ என்று எண்ணினேன். ‘இந்த முறை எனது மகனுக்கு ஆதரவு அளியுங்கள்.

rcb

மீண்டும் அதே மாதிரி நடக்கக்கூடாது’ என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அதே மாதிரி, அடுத்த பாலில் இருந்து சி.எஸ்.கே அணியை யாஷ் தடுமாற வைத்து, ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தான். இப்பொழுது, அவனை பாராட்டி பல வாழ்த்து செய்திகள் அனுப்பி வருகின்றனர். ஆனால் அவனது ‘ஹார்ட்- வொர்க்’ யார் கண்ணுக்கும் தெரியல. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு ‘எட்ஜ்’ பாலே ‘சிக்ஸர்’ போகும்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக அவன் மேற்கொண்ட பயிற்சி தான் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. கடைசி இரண்டு ஐ.பி,எல் லீக் போட்டிகளை பெங்களூருவில் பார்க்க வரும்படி யாஷ் கேட்டுக்கொண்டான். ஆனால், நான் ப்ளேஆஃப்ஸ் பார்க்க கண்டிப்பாக வருகிறேன் என்றபோது, அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது என்று கூறி சென்றுவிட்டான்.

rcb

ஆனால், இப்பொழுது அவர்கள் போட்டியில் வெற்றி பெற்று விட்டார்கள், நானும் அகமதாபாத்திற்கு டிக்கெட் எடுக்கப் போகிறேன்,” என்று தனது மகனின் வெற்றியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.