கத்துக்குட்டிகள் கொடுத்த 'பெரிய ஷாக்' – ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. முதலில் நடைபெறும் குரூப் சுற்று போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 

இதில் நான்கு பிரிவுகளில் தலா 5 அணிகள் விளையாடும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதிபெறும். அதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும், தொடர்ந்து அதில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப்போட்டிக்குச் சென்று கோப்பையை கைப்பற்றுவார்கள்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024

இதில் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் இருந்து அனைத்து போட்டிகளும் மேற்கு இந்திய தீவுகளில் மட்டுமே நடைபெறுகிறது. குரூப் சுற்றில் போட்டியில் தனது பிரிவில் இருக்கும் அணிகளோடு ஒரு அணி தலா 1 முறை மோதும். சூப்பர் 8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் தனது பிரிவில் இருக்கும் அணியுடன் தலா 1 முறை ஒரு அணி மோதும். சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த டி20 திருவிழாவுக்கு தற்போதே பல நாடுகள் தயாராகிவிட்டன. அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளையும் அறிவித்துவிட்டன.

இதுவரை ஐசிசி டி20 உலகக் கோப்பை…

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், இது 9வது டி20 உலகக் கோப்பை தொடராகும். டி20 உலகக் கோப்பையின் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி (Team England) உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை (Team Pakistan) வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பையின் முதல் தொடரை இந்திய அணியே (Team India) கைப்பற்றியது. டி20 உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகள் தலா ஒருமுறையும், இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் தலா 2 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

கத்துக்குட்டிகள் தந்த அதிர்ச்சிகள்

டி20 போட்டிகள் என்றாலே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் ஸ்டைலில் அதிரடியாக நடைபெறும் என்றாலும் டி20 உலகக் கோப்பை என்றால் போட்டி இன்னும் கடினமாக இருக்கும் எனலாம். டி20 போட்டிகளில்தான் எந்த அணி வேண்டுமானாலும், எந்த அணியையும் வீழ்த்தலாம். உதாரணத்திற்கு வங்கதேசம் போன்ற வளர்ந்த ஒரு அணியை, கத்துக்குட்டியான அமெரிக்க அணி (BAN vs USA) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த வெற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் கத்துக்குட்டி நாடுகள், வளர்ந்த நாடுகளை வீழ்த்தியுள்ளன. இந்நிலையில், அதுபோன்ற டாப் 5 போட்டிகளை இங்கு நினைவுக்கூரலாம். 

1. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை (Team Australia) 138 ரன்களில் சுருட்டிய ஜிம்பாப்வே, அதனை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடித்து வெற்றி பெற்றது. அது ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமின்றி பல்வேறு முன்னணி அணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

2. இங்கிலாந்தை ஜெயித்த நெதர்லாந்து

2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி 162 ரன்களை அடித்த நிலையில், நெதர்லாந்து அணி அதில் 4 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது. 

3. மீண்டும் நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி

2014ஆம் ஆண்டிலும் இங்கிலாந்து – நெதர்லாந்து போட்டி பரபரப்பாகவே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 133 ரன்களை எடுத்த நிலையில், அடுத்து வந்த இங்கிலாந்து அணி 88 ரன்களில் சுருண்டு மீண்டும் தோல்வியை தழுவியது. ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் மார்கன் ஆகியோர் இருந்தும் இங்கிலாந்து அன்று தோல்வியடைந்தது. 

4. ஆப்கானின் எழுச்சி

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணிதான் கோப்பையை வென்றது. இருப்பினும், அந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் ஆப்கானிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் 123 ரன்களை அடித்த நிலையில், மேற்கு இந்திய தீவுகளால் 20 ஓவர்களில் 117 ரன்களை எடுக்க முடிந்தது. இதன்மூலம், 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் வென்றது. 

5. இலங்கைக்கு நமீபியா அளித்த அதிர்ச்சி

2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நமீபியா 163 ரன்களை குவித்த நிலையில், இலங்கை அணி 108 ரன்களுக்கே ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இதுவும் டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட அதிர்ச்சியளிக்கும் போட்டியாகும்.

மேலும் படிக்க | கேகேஆர் அணிக்கு இருக்கும் அதிர்ஷ்டங்கள்.. ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் – ஏன் தெரியுமா?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.