பஸ்தி(உத்தரப்பிரதேசம்): எதிர்க்கட்சிகளை ஜூன் 4ம் தேதி மக்கள் தூக்கத்தில் இருந்து எழுப்புவார்கள். அப்போது அவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இந்த 5 கட்ட வாக்குப்பதிவுகளும் நாட்டில் மோடி ஆட்சியை உறுதி செய்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் பிரானபிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், ‘தேசத்திற்கு ராமர், வளர்ச்சிக்கு பாரம்பரியம், ஆன்மிகத்துக்கு நவீனம்’ என்று கூறியிருந்தேன். இந்த மந்திரத்தில் இன்று நாடு முன்னேறி வருகிறது.
இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது, மரியாதை அதிகரித்துள்ளது. இந்தியா இப்போது உலக மேடைகளில் பேசும்போது, உலகமே கேட்கிறது. இந்தியா முடிவெடுத்தால், உலகமே முன்னேறும்.
பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் அனுதாபிகளான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இப்போது இந்தியாவை பயமுறுத்துவதில் மும்முரமாக உள்ளன. பாகிஸ்தானுக்குப் பயப்படுங்கள், ஏனெனில் அந்த நாட்டிடம் அணுகுண்டு இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். இந்தியா ஏன் பயப்பட வேண்டும்? இன்று இந்தியாவில் பலவீனமான காங்கிரஸ் அரசு இல்லை, வலுவான மோடி அரசு உள்ளது. இன்று இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிக்கு முடிவுரை எழுதுகிறது.
நம் நாடு 500 ஆண்டுகளாக ராமர் கோயிலுக்காக காத்திருந்தது. ஆனால் இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் ராமர் கோயிலையும், ராமரையும் ஒரு பிரச்சினையாக பார்க்கிறார்கள். ராமர் கோவில் பயனற்றது என்று சமாஜ்வாதியின் பெரிய தலைவர்கள் கூறுகிறார்கள். ராமர் கோயிலுக்கு செல்பவர்கள் போலிகள் என்று வெளிப்படையாகவே சமாஜ்வாதி பிரமுகர் ஒருவர் சொல்கிறார். இண்டியா கூட்டணியின் மற்றொரு தலைவர், ராமர் கோயில் புனிதமற்றது, சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசுகிறார். இதற்கெல்லாம் எஜமானர் காங்கிரஸ் கட்சிதான்.
ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் இளவரசர் விரும்புகிறார். ராமர் கோவிலில் பாபர் பூட்டைக் கொண்டு பூட்ட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்ப விரும்புகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திய கட்சி சமாஜ்வாதி. அந்த கட்சியின் ஆட்சிக் காலத்தில், உத்தரப்பிரதேசத்தில், எங்கள் சகோதரிகளும், மகள்களும் வீட்டை விட்டு வெளியேறுவது கடினமாக இருந்தது. நிலத்தை வாங்கினால் யாராவது கையகப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தார்கள். குண்டர்களும், மாஃபியாக்களும் சமாஜ்வாதியின் விருந்தினர்களாக இருந்தார்கள். கலவரக்காரர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தது. பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் மனவுறுதியை உயர்த்தும் இந்த தேர்தலில் அப்படி ஒரு தவறு நடக்கக்கூடாது.
5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இந்த 5 கட்ட வாக்குப்பதிவுகளும் நாட்டில் மோடி ஆட்சியை உறுதி செய்துள்ளன. முழுத் தேர்தலும் முடியப்போகிறது, ஆனால் இவர்களிடம் ஒரு புதிய விஷயத்தையாவது கேட்க முடிகிறதா? எப்படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்பது குறித்தோ, வளர்ச்சியின் பார்வை என்ன என்பது குறித்தோ, பொருளாதாரம் தொடர்பான திட்டம் குறித்தோ அவர்கள் எதையும் சொல்லவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிளில் 79 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் மற்றம் சாமாஜ்வாதி இளவரசர்கள் (ராகுல் காந்தி மற்றம் அகிலேஷ் யாதவ்) வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். தொடக்கத்தில், இவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என கூறினேன். அந்த பகல் கனவு குறித்து தற்போது புரிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி மக்கள் இவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்புவார்கள். அப்போது அவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவார்கள்” என தெரிவித்தார்.