சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி இந்த வார இறுதியில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை பெதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் தற்போது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டுள்ளன. 6-ம் கட்ட தேர்தல் வரும் மே 25-ம் தேதியும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஸ்டிராங் அறைகளில் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்களுக்கான பயிற்சி இந்த வார இறுதியில் தொடங்குகிறது. தேவை அடிப்படையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுக்கும் முடிவின்படி ஒன்று அல்லது இரண்டு கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது, சட்டப்பேரவை தொகுதிகள் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் 14 மேஜைகள் அமைத்து நடைபெறும். இதில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கும் தேர்தல் ஆணைய விதிகள் படி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும். 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளும் எண்ணப்படும். இதுதவிர, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரத்தில் உள்ள பதிவுகளும் எண்ணி சரிபார்க்கப்படும்.