ராகுலைப் புகழ்ந்து ட்வீட்; கலகலத்த அதிமுக… செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் செல்வப்பெருந்தகை, “1967-ம் ஆண்டிலிருந்து 57 ஆண்டுகள் நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது, தொகுதிகளை கேட்கும் நிலையிலிருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பலப்பலத்த வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் இந்தக் கட்சியில் பணிபுரியலாம். காங்கிரஸ் ஜெயித்து நமது அண்டை மாநிலங்களிலெல்லாம் ஆளும் கட்சியாக உள்ளபோது, தமிழகத்திலும் நாம் ஏன் அத்தகைய நிலையைக் கொண்டுவரக் கூடாது?” என கொதித்து இருந்தார்.

செல்வப்பெருந்தகை

மறுபக்கம் “காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் ஸ்டாலின் கொடுக்கிறார்” என அதே கட்சியை சேர்ந்த சீனியர் லீடர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்வினையாற்றியது வேறு கதை. இருப்பினும் பெருந்தகையின் இந்தப் பேச்சு தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலில்தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து தட்டிவிட்ட ட்வீட் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியிருக்கிறது.

“நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று ராகுல் காந்தியின் படத்துடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார், செல்லூர் ராஜூ. ஏற்கெனவே, “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசிவரும் சூழலில், செல்லூர் ராஜூவின் பேச்சு, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

எனவே, இந்தச் சம்பவங்களின் பின்னணி அறிந்துகொள்வதற்காக களமிறங்கினோம்..

செல்லூர் ராஜூ – ராகுல் காந்தி

இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “அ.தி.மு.க-வில் இருந்து கொண்டே தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்லூர் ராஜூ செயல்பட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க-வையே சிக்கலில் சிக்க வழிவகை செய்துவிடுகிறது. `மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சிறையே எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்பூட்டு சட்டமே எங்களுக்காகத்தான் கொண்டு வந்தான்’, `அவதூறு வழக்கெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி’, `மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்’ என்றெல்லாம் பேசினார்.

இந்தச் சூழலில்தான் தற்போது ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ராகுலின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். சாதாரண நாளில் செய்து இருந்தால்கூட பரவாயில்லை. அதுவும் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் செய்திருப்பதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடியை மாற்ற வேண்டும் எனச் சொல்லும் குரூப்பில் இவரும் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது” என்றனர்.

ராகுல் காந்தி

ஆனால் இதை செல்லூர் ராஜூ முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “எடப்பாடி பழனிசாமிபோல எளிமையாக ராகுல் காந்தி இருக்கிறார். எனவேதான் அவரை புகழ்ந்து பதிவிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?” எனத் தெரிவித்தார். மேலும் தனது பதிவை நீக்க முடியாது எனவும் முரண்டு பிடித்து வந்தார். இது அ.தி.மு.க-வுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவழியாக தனது பதிவை நீக்கிவிட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “எளிய மக்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அப்போதெல்லாம் செல்லூர் ராஜூவுக்கு ஏற்படாத நெகிழ்ச்சி, இப்போது ஏன் ஏற்படுகிறது… தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணிக்கும், மோடி அணிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் ராஜூ பேசியிருப்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இப்போதே துண்டை போட்டு வைப்போம் எனத் தெரிவித்து இருக்கிறாரோ என்கிற எண்ணம், அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது. அதேபோல் 2026 தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைக்கலாம் என்கிற எண்ணத்தை கட்சிக்குள் கொண்டுவரலாம் எனப் போட்டாரா என்றும் தெரியவில்லை.

செல்லூர் ராஜூ

அதேநேரத்தில் சாதாரணமாக பதிவை போட்டேன் என்று கூறியவர், பிறகு தனது பதிவை நீக்கியிருக்கிறார். எனவே அதற்கு பின்னால் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதற்கு ‘இந்த பதிவால் பாஜக-வின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என எடப்பாடி, வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை போன்றோர் ஆட்கள் மிரட்டியதுதான் காரணமாக இருக்கலாம். முக்குலத்தோர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் ஓ.பி.எஸ், டி.டி.வி-க்கு எதிராக செயல்படுவதை மதுரை அ.தி.மு.க-வினர் குறைத்துக்கொண்டார்கள்.

எடப்பாடியிடம் சின்னம் இருக்கும் வரை ஆதரவு கொடுப்பார்கள். மேலும் கொங்கு பகுதியில் இருக்கும் ஒற்றுமை முக்குலத்தோரிடம் இல்லை. எனவே எடப்பாடிக்கு எதிரான அணி வலுப்பெறுவதற்காகக்கூட இதெல்லாம் நடந்து இருக்கலாம். செல்லூர் ராஜூவின் தலைவர் எம்.ஜி.ஆர் ஒருமுறை, `காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ எனப் பேசிவிட்டார். அப்போது தி.மு.க-வில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எம்.ஜி.ஆர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. தற்போது செல்லூர் ராஜூ பின்வாங்கி விட்டார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.