கோவை: பில்லூர் அணையிலிருந்து 90 நாட்களுக்கு பிறகு இன்று மாலை (மே 22) மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அமைந்துள்ள பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்தது, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
பில்லூர் அணையின் நீர்மட்டம் 100 அடி என்றாலும், அதில் 40 அடி வரை சேறும், சகதியுமாகவே உள்ளது. முன்பு பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தினமும் விநாடிக்கு 6,500 கனஅடி வரை கீழ்புற மதகு மூலம் பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நீர்மட்டம் குறைவால் மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
கிட்டத்த 3 மாதங்களாக பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கனமழையின் காரணமாக இன்று (மே 22) மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.50 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையிலிருந்து கீழ்புற மதகு வழியாக மின் உற்பத்திக்காக இன்று (மே 22) மாலை விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “90 நாட்களுக்கு பிறகு பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனாலும், மழை பெய்து வருவதாலும் பவானியாற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது. எனவே, பவானி ஆற்றில் யாரும் இறங்கக்கூடாது என கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.