வாராணசி: “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான்” என்று பிரதமர் மோடி கூறியது வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாராணசியில் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ஊடகங்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அதன்படி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மோடியிடம், நிருபர் ‘நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களின் ஆற்றலுக்கு என்ன காரணம்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மோடி, “என் தாய் உயிருடன் இருக்கும் வரை தாய் மூலமாக தான் இந்த உலகுக்கு வந்தேன் என்று நினைத்தேன். அவரின் மரணத்துக்குப் பின் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன்.
நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” என்று கூறினார். இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரான சாம்பித் பத்ரா, “புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் சில மணிநேரங்களில், “பிரதமர் மோடி புரி ஜெகந்நாதரின் பக்தர் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன்” என்று விளக்கமளித்தார். இந்த நிலையில், தான் பிரதமர் மோடி தன்னை கடவுள்தான் இந்த பூமிக்கு அனுப்பியது என கூறியிருப்பது வைரலாகி வருகிறது.