மதுரை: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை செல்லூர் ராஜூ பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், அது அதிமுகவின் கருத்து இல்லை என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் சுமந்து பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா இதனை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தாமதமாக தொடங்கப்பட்டாலும் மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராகுல் காந்தியை பாராட்டியது அவரது தனிப்பட்ட கருத்து. அரசியல் ரீதியாக அவர் கருத்து சொன்னதாக நான் கருதவில்லை. அவர் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். ஆனால் அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த கருத்தை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை. செல்லூர் ராஜு யாரையும் வாழ்த்துவதில் அவர் தயங்க மாட்டார்.
அந்த வகையில் வாழ்த்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். அரசியல் ரீதியாக வாழ்த்தியதாக நாங்கள் கருதவில்லை. நாங்கள் தேசிய கட்சியை விரும்பவில்லை. பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி அதிமுக அவைகளை விரும்புவதில்லை” என்றார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.