கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் இன்று மாலை சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் மிதமானது முதல் கனமழை பெய்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று மாலை 5.20 மணிக்கு, சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கி, மாலை 5.55 மணி வரை நீடித்தது.
சூறாவளி காற்றால், கிருஷ்ணகிரி தேர்நிலைய தெருவில் மரங்கள் முறிந்து விழுந்ததால், சிமெண்ட் கூரை வீடுகள் சேதமானது. மேலும், கிருஷ்ணகிரி – சேலம் சாலையில் பாதாள சாக்கடையில் மழைநீருடன், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.
ஐந்து ரோடு ரவுண்டனா பகுதியில் பெங்களூர் சாலையிலும், கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே செல்லும் சர்வீஸ் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்றனர்.
இதே போல், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரே சாலையில் தேங்கிய மழைநீரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். 35 நிமிடங்களில் பெய்த மழையால், நகரில் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது குறிப்பிடதக்கது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, மழையளவு மில்லிமீட்டரில்: அதிகப்பட்சம் ஓசூரில் 40.3, நெடுங்கல் 33, பெணுகொண்டாபுரம் 17.2, கிருஷ்ணகிரி 16, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளில் தலா 9, போச்சம்பள்ளி 8.5, பாம்பாறு அணை, ராயக்கோட்டையில் தலா 7, பாரூர் 6.8, ஊத்தங்கரை 6.6, அஞ்செட்டி 5.4, சூளகிரி 5, சின்னாறு அணை 4, தேன்கனிக்கோட்டை 3 மில்லிமீட்டர் பதிவானது.