Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்களில் கட்டிகளும், கருமையும்: காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி, 6 வயதிலும், 2 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.  முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து எனக்கு மார்பகங்களில் சின்னச்சின்னதாக பருக்கள் போன்ற கட்டிகளும், கரும் படலமும் ஏற்படத் தொடங்கின. வலியும் இருந்தது. இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போதும் அந்தப் பிரச்னை அவ்வப்போது வந்தது.  இதற்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள என்ன சிகிச்சைகள் உள்ளன?
-Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பமாக இருக்கும்போதும் சரி, தாய்ப்பால் கொடுக்கும்போதும் சரி,  நிப்பிள் எனப்படும் மார்பகக் காம்புகளைச் சுற்றியுள்ள ஏரியோலா (areola) என்கிற கருமையான பகுதியில் எண்ணெய்ச் சுரப்பிகள் இருக்கும். அவற்றை ‘செபேஷியஸ் கிளாண்ட்ஸ்’ ( Sebaceous glands ) என்றுசொல்வோம். 

இந்தச் சுரப்பிகளிலிருந்து ஒருவித எண்ணெய்ப்பசையான  திரவம் சுரக்கப்படும். அது ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்டதாகவும் இருக்கும். தாய்ப்பால் கெட்டுப்போகாமலிருக்க இந்தத் திரவம் உதவியாக இருக்கும். இந்தச் சுரப்பிகள் கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சற்று வீங்கி,காணப்படும். அதை ‘மான்ட்கோமெரி டியூபர்கள்ஸ் ‘  (Montgomery tubercles) என்று சொல்வோம். அது சற்று பெரிதாகவும் அடர் நிறத்திலும் இருக்கலாம். 

பொதுவாக, தாய்ப்பால் கொடுத்து முடித்ததும் இது தானாக மறைந்துவிடும். நிப்பிளை சுற்றிய ஏரியோலா பகுதி அடர்கருமையாக மாறவும் கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே காரணம்.  பலருக்கும் இந்தக் கருமை முற்றிலும் மறையாது. 

மார்பகங்கள்

ஆனால், மான்ட்கோமெரி டியூபர்கள்ஸ் மட்டும் தாய்ப்பால் கொடுத்து முடித்ததும் பழையபடி மாறிவிடும். அப்படி மறையாமல், எப்போதும் உங்களுக்கு இப்படி இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரையும் சருமநல மருத்துவரையும் கலந்தாலோசிப்பது நல்லது. 

பொதுவாக இந்த  மான்ட்கோமெரி டியூபர்கள்ஸ் பாதிப்பால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், ஒருவேளை அதில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, அடைபட்டிருந்தாலோ, சிவந்திருந்தாலோ, வீங்கியிருந்தாலோ உடனடியாக அதற்கு மருத்துவம் தேவைப்படும். அப்படியில்லாத பட்சத்தில் இதற்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. மார்பகங்களில் அசாதாரண மாற்றத்தைப் பார்த்தால், உடனே மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.