மே 18-ம் தேதி நடந்த போட்டியில் ஆர்சிபி-யிடம் மயிரிழையில் மேட்சைத் தவறவிட்டு, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த தோனியை, CSK Haters கூட மனசு வலியோடுதான் பார்த்தார்கள்.
இதைத் தொடர்ந்து இப்போது சொந்த ஊர் திரும்பியிருக்கிறார் ‛தல’ தோனி. மே 19-ம் தேதி பெங்களூருவில் இருந்து குடும்பத்தோடு ராஞ்சி திரும்பிவிட்டோம் என்று தோனியின் மனைவி சாக்ஷி சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார்.
இந்நிலையில், ‛அடுத்த ஐபிஎல் 2025-ல் தோனி சிஎஸ்கே டீமுக்காக நிச்சயம் விளையாடுவார் என்று ரெய்னா சொல்லியிருக்கிறார்!’
‛முழங்கால் அறுவைச் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்’ என்று பலதரப்பட்ட செய்திகள் தோனியைப் பற்றி வலம் வந்து கொண்டிருக்க…
‛தல’ தோனியோ – தனது சொந்த ஊரான ராஞ்சி பகுதியில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் தனக்குப் பிடித்தமான யமஹா RD350 எனும் வின்டேஜ் பைக்கில் அவர் ரைடு போவதுபோல் ஒரு வீடியோ, இப்போது எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தோனிக்கு கிரிக்கெட், குடும்பத்துக்குப் பிறகு பிடித்த விஷயம் – பைக்குகள். தோனியின் பைக் கலெக்ஷன் பற்றி உலகமே அறியும். சுஸூகி ஷோகன், நார்டன் ஜூப்ளி 250, யமஹா RD350, ராஜ்தூத், BSA கோல்டு ஸ்டார் போன்ற வின்டேஜ் பைக்குகளில் தொடங்கி லேட்டஸ்ட்டான 80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நின்ஜா H2 சூப்பர் பைக், 50 லட்சம் மதிப்புள்ள தோனிக்காகவே ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கான்ஃபெடரேட் ஹெல்கேட் X132 எனும் பைக், 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸூகி ஹயபூஸா பைக், 15 லட்சம் மதிப்புள்ள யமஹா தண்டர்கேட், 25 லட்சம் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், 35 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி 1098, 3 லட்சம் மதிப்புள்ள அப்பாச்சி RR310 என்று வெரைட்டியாக பைக்குகளை தனது கராஜில் நிறுத்தி வைத்திருக்கிறார் தல.
உண்மையோ பொய்யோ… தோனிக்கு மிகவும் பிடித்த பைக்காக யமஹா RD350 தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. தனது ஏரியாவில் பைக் ரைடு போக வேண்டும் என்றால், ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு தனது யமஹாவில்தான் கிளம்புவாராம். ஆண்டுக்கு ஒரு யமஹா RD350 பைக்கை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் தோனி. 2020-ல் ஒரு யமஹா பைக் வாங்கினார்.
அப்புறம், ஜூலை 2022-ல் ஒரு பைக் வாங்கியவர், டிசம்பர் 2023-ல் ஒரு பச்சை நிற RD350 பைக்கை ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்து வாங்கியிருந்தார் தோனி.
சண்டிகரைச் சேர்ந்த Blue Smoke Customs எனும் பைக் ரெஸ்டோரேஷன் நிறுவனம்தான் தோனிக்குப் பிடித்தபடி, பெட்ரோல் டேங்க்கின் மேல் அவரின் ஜெர்ஸி நம்பரான 7 எனும் ஸ்டிக்கரிங்குடன், தோனிக்குப் பிடித்தபடி பைக்குகளை ரெடி செய்து கொடுக்கும். இந்த Smoke Customs, டிவிஎஸ் மோட்டார் கம்பெனிக்கெல்லாம் பைக் மாடிஃபிகேஷன் செய்து தரும் அளவு பெயர்போன நிறுவனம். லேட்டஸ்ட்டாக இவர்கள் மாடிஃபை செய்து கோவாவில் அறிமுகப்படுத்திய டிவிஎஸ் ரோனின் பைக், ரொம்பப் பிரபலம்.
தோனிக்கு யமஹா RD350 பைக் பெர்சனலாகப் பிடிக்க ஒரு காரணம் இருக்கிறதாம். அவர் டீன்ஏஜ் இளைஞராக இருந்தபோது, அவர் ஓட்டிய முதல் மோட்டார் சைக்கிள் சிவப்பு நிற யமஹா RD350தான் என்கிறது ஒரு பேட்டிச் செய்தி. அதனாலேயோ என்னவோ, RD350 பைக்குடன் அவருக்கு பெர்சனலாக ஒரு கனெக்ஷன் இருந்து வருகிறது. பைக் வரலாற்றில் இந்த யமஹா RD350-க்கென்று இந்திய இளைஞர்களிடம் ஒரு தனிமவுசு இருந்து வருவது உண்மைதான். இந்த 2 ஸ்ட்ரோக், ஏர்கூல்டு, 350 சிசி இன்ஜினில் நெடுஞ்சாலைப் பயணம் போனால்… சும்மா ஜிவ்வென்று இருக்கும். 80-களிலயே 49bhp பவரோடு வெளிவந்த பைக் இது!
இந்த வீடியோவில் அவர் வருவது நீல நிற யமஹா RD350 பைக் என்று தெரிகிறது. மொத்தம் தோனியிடம் 3-க்கும் மேற்பட்ட RD350 பைக்குகள் இருக்கிறது என்கிறார்கள். வெளியே எங்கேயோ ரைடு போய்விட்டு, அவர் தனது வீட்டுக்குப் போவதுபோன்ற அந்த வீடியோவை ஒரு ரசிகர் எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார். அதாவது, ‛அடுத்த சீஸன்ல பார்த்துக்கலாம்’ என்று தோனி வழக்கமான லைஃப் ஸ்டைலுக்குத் திரும்பியிருக்கிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கவும்; அடுத்த ஐபிஎல்-லிலும் தல தரிசனம் இருக்கு போல!