விபத்தை ஏற்படுத்திய சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து ரூ.48 ஆயிரத்துக்கு மது குடித்தது அம்பலம்

புனே,

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள கல்யாணிநகர் சந்திப்பு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக வந்த சொகுசு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஐ.டி. நிறுவன ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சொகுசு காரை, குடிபோதையில் ஓட்டி விபத்துக்கு காரணமாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டான்.

இந்த கார் விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பதை பதைக்க வைக்கும் இந்த கோர விபத்தில் சிறுவனுக்கு உடனடியாகவும், எளிதாகவும் ஜாமீன் வழங்கப்பட்டது, பலதரப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஓட்டுனர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் சிறுவன் வசம் சொகுசு காரை கொடுத்த அவனது தந்தையும், ரியஸ் எஸ்டேட் அதிபருமான விஷால் அகர்வாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை சிவாஜி நகர் பகுதியில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பலர் கோர்ட்டு வளாகத்தில் கூடி சிறுவனின் தந்தைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தில் இருந்த அவரை தாக்க முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆத்திரம் அடங்காத சிலர் அவர் அழைத்துச்செல்லப்பட்ட போலீஸ் வாகனம் மீது கருப்பு மையை வீசினர்.

இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் போலீசார் அவரை பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறுவனின் தந்தையை நாளை (வெள்ளிக்கிழமை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

சிறுவனுக்கு மது வழங்கிய பார் ஓட்டல் நிர்வாகிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். அந்த பார் ஓட்டலில் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்ட சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.48 ஆயிரத்துக்கு மது குடித்ததற்கான ரசீதை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து நேற்று அந்த ஓட்டலும் சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவனது தாத்தா அளித்த உத்தரவாதத்தின்பேரில் தான் அவன் விடுவிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.