சமீபத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜமுருகன் கோயிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகனின் சிலை ஒழுங்காக அமையவில்லை என்று பரபரப்பாகப் பேசப்பட்டு, அது உடனே சீர் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்தச் சிலை மட்டுமல்ல, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் எங்கும் சிவன், சக்தி, காளி, விநாயகர், முருகன், பெருமாள் போன்ற பல சிலைகள் ஒழுங்கின்றி கேலி சிற்பம் போல அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறோம்.
கட்டடங்கள் உருவாகப் பல விதிமுறைகளும் வழிகாட்டல்களும் இருக்கும்போது தெய்வமாக வணங்கப்படும் இது போன்ற சிலைகள் அமைக்க கட்டுப்பாடுகள், வழிகாட்டும் அமைப்புகள் என ஏதேனும் உள்ளதா என்று மாமல்லபுரம் அரசு சிற்ப மற்றும் கட்டடக்கலைக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர், எஸ். கீர்த்திவர்மன் பெருந்தச்சனிடம் கேட்டோம்.
“காஞ்சி கயிலாசநாதர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் என சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அற்புதமான ஆலயங்களையும் சிற்பங்களையும் அமைத்து உலகை வியக்கச் செய்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம் உலகப் புகழ் கொண்டது என எல்லோரும் வியக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று முறையான வழிகாட்டல் இல்லாமல் பல சிமெண்ட் சிலைகள் கேலிக்குரியதாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து, தமிழக அரசிடமும் அறநிலையத்துறை கவனத்துக்கும் பல முறை எடுத்துக் கூறியும் ஏனோ இதில் யாருமே செவி மடுக்கவில்லை. ஒரு வீடு கட்ட, வரைபடம், பல வழிகாட்டுதல்கள், முறையான அனுமதி என்று எல்லாம் இருக்கும்போது தெய்வமாக வணங்கப்படும் சிலைகளைக் கோயில்களில் நிர்மாணிப்பதில் இந்த அலட்சியம் ஏன் என்று தெரியவில்லை.
சிற்ப சாஸ்திரமோ, தொழில் முறையோ அறியாத கட்டடத் தொழிலாளர்களே தெய்வச் சிலைகள் மற்றும் சிற்ப வேலைகளைச் செய்வது தவறு. இது முழுக்க வியாபார நோக்கத்துக்காக மட்டுமே செய்யப்படுகிறது. உயரமான சிமெண்ட் சிலைகள் எல்லாம் பக்திக்காக அல்ல, மக்களைக் கவர்ந்து இழுக்கவே என்றும் தெரிந்து கொள்ளலாம். கருங்கல், சுதை அல்லது உலோகங்களில் மட்டுமே சிலைகள் செய்வது நம் வழக்கம். இப்போது கட்டடங்கள் போல இரும்பு கம்பி, சிமெண்ட் கொண்டு சிலைகள் செய்வது தவறானது.
மலேசியா பத்து மலை முருகன் சிலை உருவான பிறகே, தமிழ்நாட்டிலும் பல சிலைகள் பிரமாண்டமாக உருவானது. இது போன்ற சிலைகள் நன்கு படித்த ஆகமம் தெரிந்த சிற்பிகளால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். ஆலய நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் சிற்பிகள் நிறைவான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் மாவட்ட அளவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் ஸ்தபதிகள், சிற்பிகள் அடங்கிய குழு இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கடவுளரின் சிற்பமும் இந்த அளவில் தான் அமைய வேண்டும் என்று விதி உள்ளது. அதில் முருகன் சிலைகள் நவதாளம் என்ற அளவிலேயே இருக்க வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகின்றது.
மாமல்லபுரம் போன்ற அரசு சிற்பக் கல்லூரிகளில் படித்த சிற்பிகள் தெய்வ சிலைகளை முறைப்படி செய்கிறார்கள். மற்றபடி கட்டடம் கட்டுவோரெல்லாம் சிற்பம் செய்தால் சரியாக வராது. ஏற்கெனவே அரசாங்கத்திடம் முறைப்படிப் பயின்ற சிற்பிகளின் பட்டியல் உள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் வேலைகளை நியமிக்கலாம்.
ஆலய நிர்வாகம் தன் இஷ்டம் போல சிற்பங்களைச் செய்து விடக்கூடாது. இது தெய்வ குற்றம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நம் பாரம்பர்யக் கலை மற்றும் கலாசாரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய நம்மால் ஒரு முருகன் சிலையைக் கூட ஒழுங்காக அமைக்கத் தெரியவில்லையே என்ற அவதூறும் எழும்.
எனவே அரசும் அறநிலையத்துறையும் இதை முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான சிற்பிகளைக் கொண்டே கோயில் மற்றும் சிற்ப வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இது தெய்வ காரியம் மட்டுமல்ல, நமது கலைக்கும் இழுக்காகி விடும்.
உதாரணத்துக்குச் சென்னைப் பன்னாட்டு விமான நிலையத்தில் ஐராவதம் எனும் யானை சிலை செய்து வைத்துள்ளார்கள். அதற்குக் கறுப்பு வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள். ஐராவதம் இந்திரனின் யானை. அது வெள்ளை வண்ணம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிற்பத்தை செய்தச் சிற்பிக்கு மட்டும் தெரியவில்லை. அந்தக் குழுவில் இருந்த யாருக்குமே தெரியவில்லை என்பதும் ஆச்சர்யம். நவீன ஓவியம், சிற்பம் என்றால் எப்படியும் இருக்கலாம். ஆனால் பாரம்பர்ய திருக்கோயில் சிற்பம், ஓவியம் என்றால் அதில் பழைமையும் புனிதமும் இருக்க வேண்டும்.
மத சம்பந்தமான, மக்கள் வழிபாடு செய்யக் கூடிய சிலைகள் விஷயத்தில் நிச்சயம் கவனக்குறைவு இருக்கவே கூடாது. எனவே அரசும் ஆலய நிர்வாகங்களும் இதில் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்றார் கீர்த்திவர்மன் ஆதங்கத்தோடு!