ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வன்முறைகள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநரை டெல்லிக்கு நேரில் அழைத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
தேர்தல் நாளில் 7 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும் மாசர்லா தொகுதி வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி ஒரு வாக்குச் சாவடியில் புகுந்து இவிஎம் சாதனங்களை தூக்கி வீசி உடைத்த சம்பவம் தாமதமாக வெளியே வந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆனது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனே கைது செய்ய ஆந்திர மாநில டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை அறிந்த பின்னெல்லி தனது இரு சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் காரில் ஹைதராபாத் நோக்கி பயணமானார்.
அவர்களை ஆந்திர போலீஸார் பின் தொடர்ந்து சென்று தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், இன்னாபூர் எனும் இடத்தில் கைது செய்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அங்கு எம்எல்ஏவின் இரு சகோதரர்கள் மற்றும் இரு ஆதரவாளர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக ராம கிருஷ்ணா ரெட்டிவெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.