புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (மே 24) வலுப்பெறும்.
அது மேலும் வலுப்பெற்று நாளை மறுநாள் (மே 25) புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகவுள்ள தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு ரீமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் மே 26-ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கலாம். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசக் கூடும்.
இதற்கிடையே, புயல் வடக்குப் பகுதி நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.