புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் மே 13-ம் தேதி தான் தாக்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருந்தார் என்று தாக்குதலுக்கு உள்ளான ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரான பிபவ் குமாரால் கடந்த 13-ம் தேதி தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: மே 13 அன்று காலை சுமார் 9 மணியளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றேன். ஊழியர்கள் என்னை டிராயிங் ரூமில் உட்காரச் சொன்னார்கள், கேஜ்ரிவால் வீட்டில் இருப்பதாகவும், அவர் என்னைச் சந்திக்க வருவதாகவும் சொன்னார்கள்.
அதன் பிறகு கேஜ்ரிவாலின் பிஏ பிபவ் குமார், ஆக்ரோஷத்துடன் வந்தார். ‘என்ன நடந்தது? கேஜ்ரிவால் வருகிறாரா?’ என்று நான் கேட்டேன். பிபவ் குமார் என்னை 7 முதல் 8 முறை அறைந்தார். நான் அவரைத் தள்ள முயன்றபோது, அவர் என் கால்களைப் பிடித்து இழுத்தார். மேஜை மீது எனது தலை மோத வைத்தார். நான் தரையில் விழுந்தேன். அவர் என்னை தனது கால்களால் உதைக்க ஆரம்பித்தார். நான் கதறிக் கொண்டே உதவிக்காக கெஞ்சினேன். ஆனால், யாரும் அங்கு வரவில்லை.
பிபவ் குமார், யாருடைய அறிவுறுத்தலின் காரணமாக தாக்கினாரா அல்லது சொந்த விருப்பத்தின் காரணமாக தாக்கினாரா என்பது எனக்குத் தெரியாது. இவை அனைத்தும் விசாரணைக்குரிய விஷயம். டெல்லி காவல்துறைக்கு நான் மிகவும் ஒத்துழைத்து வருகிறேன். நான் யாருக்கும் க்ளீன் சிட் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் டிராயிங் ரூமில் இருந்தேன். அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் இருந்ததால் நான் மிக மோசமாக தாக்கப்பட்டேன். நான் உண்மையில் மிகவும் மோசமாக கத்தினேன். ஆனால் யாரும் உதவ வரவில்லை. எனக்கும் என் தொழிலுக்கும் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் 2006-ல் இருந்து ஆம் ஆத்மியில் இருக்கிறேன். நான் 7 வருடங்கள் குடிசைவாழ் பகுதிகளில் வாழ்ந்தேன். நாங்கள் அனைவரும் இந்த முறையில்தான் வேலை செய்தோம். ஆனால் அதிகாரம் வந்தால், பல விஷயங்கள் அதனுடன் சேர்ந்து பெரிய விஷயமாகிவிடும் என்று தோன்றுகிறது. படிப்படியாக ஈகோ உங்கள் தலைக்கு ஏறும்போது, உண்மை எது, பொய் எது, சரி எது, தவறு எது என்று உங்களால் பார்க்க முடியாது. முதலில், ஒரு பெண்ணை அடிப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. ஒவ்வொருவரின் ஈகோவும் அதிகமாகிவிட்டது. எல்லாமே மேலே இருந்து தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன்.
சமூக ஊடகங்களில் எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலான பல்வேறு வீடியோக்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. என்னை கேரக்டர் அசாசினேஷன் செய்கிறார்கள். எஃப்ஐஆரில் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் சரியானது. நான் எந்தவித சோதனைக்கும் என்னை உட்படுத்தத் தயாராக இருக்கிறேன். மிகப் பெரிய துரோகம் எனக்கு இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். கடவுள் யாருக்கும் இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கக்கூடாது. நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.
ஆம் ஆத்மியில் தற்போது பிபவ் குமார் சாதாரண நபர் அல்ல. அவரது வீடு மிகவும் ஆடம்பரமாக உள்ளது. அவருக்கு இதுபோன்ற வீடு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் எந்த அமைச்சருக்கும் கூட இதுபோன்ற வீடு கிடைக்கவில்லை. அவர் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். தற்போது, முழு கட்சியிலும் அவர் சக்திவாய்ந்தவராக இருக்கிறார். மொத்தக் கட்சியும் அவரைப் பார்த்து பயப்படுகிறது. நான் புகார் அளித்தால், கட்சி என்னை பாஜகவின் ஏஜென்ட் என்று கூறும் என்று என்னிடம் கூறப்பட்டது. இவ்வளவு நடந்தும் கேஜ்ரிவாலிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. இதுவரை அவர் என்னை சந்திக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை கேஜ்ரிவால் பாதுகாத்து வருகிறார்” என்று ஸ்வாதி மாலிவால் கூறி இருக்கிறார்.
ஸ்வாதி மாலிவாலின் புகாரின் அடிப்படையில் பிபவ் குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மே 19 அன்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிபவ் குமார் தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.