தைபே: தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், தைவானைச் சுற்றி இரண்டு நாள் (மே 23,24) ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது. இதனை தைவான் கடுமையாக கண்டித்துள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே, தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பதவியேற்ற நிலையில், அந்நாட்டை சுற்றி சீனா இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென்று இரண்டு நாள் போர் பயிற்சியை (ராணுவப் பயிற்சி) தொடங்கியுள்ளது.
மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்ளிட்ட தீவுகளைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு போர் பயிற்சிகள் நடந்து வருகின்றன. இதில் சீன ராணுவத்தின் போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. வில்லியம் லாய் தனது முதல் உரையில், தங்கள் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீனாவைக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அவரின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா இந்த அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு கடுமையான தண்டனையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கையை கண்டித்திருக்கும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், “சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல் ஆகும். தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.