பாகிஸ்தானில் வினோத சம்பவமாக மின்சாரம் திருடப்பட்டதாக மூன்று வயது சிறுவன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) , நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம் (WAPDA) ஆகிய அரசு நிறுவனங்கள், 3 வயது சிறுவன்மீது மின்சார திருட்டு புகார் அளித்தது.
அதனடிப்படையில் 3 வயது சிறுவன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 3 வயது சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சட்டபூர்வ பிரதிநிதியிடமிருந்து பிரமாணப் பத்திரத்தைப் பெற்ற கூடுதல் அமர்வு நீதிபதி வழக்கு தள்ளுபடி செய்தார்.
இப்படியிருக்க, கடந்த மாதம் ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டில், பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனிகளுக்குள் (DISCOs) நடந்த மின் திருட்டு, பாகிஸ்தானின் கருவூலத்துக்கு அந்த நாட்டு மதிப்பில் 438 பில்லியன் இழப்புக்கு வழிவகுத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த இழப்பு 723 பில்லியன் மொத்த வருடாந்திர பில்லிங்கில் கணிசமான பகுதி என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டியது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பஞ்சாப் எரிசக்தி துறையானது, மின்சார விநியோக நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கவலைகளை எழுப்பியது.
அதோடு, மாகாண திணைக்களங்களில் 102,000க்கும் அதிகமான மின்சார இணைப்புகள் இருப்பதாகவும், உண்மையான நுகர்வுக்கும் கட்டண தொகைக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதாகப் பஞ்சாப் எரிசக்தி துறை தெரிவித்தது. இந்தப் பிரச்னைக்கு பதிலளிக்கும் விதமாக, மின் திருட்டைக் கட்டுப்படுத்தவும், வருவாய் மீட்டெடுப்பை அதிகரிக்கவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு (DISCOs) மத்திய புலனாய்வு அதிகாரிகளை (FIA) அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.